ச‌ட்ட‌ப் பேரவை‌‌யி‌ல் துணை ‌நி‌தி‌நிலை அ‌‌றி‌க்கை தா‌க்க‌ல்!

Webdunia

வியாழன், 18 அக்டோபர் 2007 (19:30 IST)
த‌மிழக ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் இ‌ன்று 2007-08-ம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்தார். இந்த துணை மதிப்பீட்டில் மொத்தம் ரூ.1,959 கோடியே 63 லட்சம் நிதியை கூடுதலாக ஒதுக்குவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.

ஏழை குடும்பங்களுக்கு கூடுதலாக 3 லட்சம் இலவச எரிவாயு இணைப்புகளுடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள் வழங்குவதற்காக ரூ.60 கோடி ஒது‌க்க அரசு அனும‌தி‌த்து‌ள்ளது.

புதிய மின் உற்பத்தி திட்டங்களுக்காக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ரூ.140 கோடி பங்கு மூலதன உதவி வழங்குவதற்கு அரசு முடிவெடு‌த்து‌ள்ளது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் மகப்பேறு உதவிக்கான கூடுதல் நிதி ஒதுக்க ரூ.80 கோடி வழங்க‌ப்படு‌ம்.

ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ரூ.109 கோடியு‌ம், நமக்கு நாமே திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த ரூ.50 கோடியு‌ம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் ஏழை பெண்களின் திருமண நிதி உதவிக்காக கூடுதலாக ரூ.40 கோடியு‌ம் ஒது‌க்க அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.

அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், பணியில் இருந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் ஆகியோருக்கு மீதமு‌ள்ள ஊதிய குழுவின் 60 ‌விழு‌க்காடு நிலுவைத் தொகைக்கு பொது வருங்கால வைப்பு நிதி கணக்குகளுக்கு வழங்கப்படுவது போல், வட்டித் தொகை அளிக்க அரசு அனுமதித்துள்ளது. இதற்காக கடன் செலவுகள் கீழ் துணை மதிப்பீடுகளில் ரூ.358 கோடி சேர்க்கப்பட்டுள்ளது.

இ‌வ்வாறு மேலு‌ம் ‌சில ‌தி‌ட்ட‌ங்களு‌க்கு‌ம் அவ‌ற்‌றி‌ன் த‌ன்மை‌க்கு‌த் த‌க்கவாறு ‌நி‌தி ஒது‌க்க அனும‌தி வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்