இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்ததுபோல் ஜவுளித்துறை நிறுவனங்களுக்கு உயர் தொழில் நுட்ப மேம்பாட்டு நிதி மானியம் மற்றும் சலுகை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என பெடக்சில் தலைவர் மதிவாணன் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சங்கர் சிங் வகேலா, நிதி அமைச்சர் சிதம்பரம் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: வங்கிகளில் கடன் பெற்று திருப்பி செலுத்துவதில் ஐவுளித்துறை நிறுவனத்தினர் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர்.
வங்கிகளில் கடன் பெற்று தொழில் தொடங்குபவர்களுக்கு மத்திய அரசின் உயர் தொழில் நுட்ப மேம்பாட்டு நிதியின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஜவுளித்துறை சம்பந்தப்பட்ட தொழில்களுக்கு இருபது சதவீதம் மானியம் வழங்கப்பட்டது.
தற்போது அந்த மானியம் வழங்குவதை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. நவீன தொழில்நுட்ப பூங்காவில் ஜவுளித்துறை சார்ந்த புதிய தொழில் தொடங்குவதற்காக உள்நாட்டிலும், அயல் நாட்டிலும் விசைத்தறி வாங்க ஆர்டர் கொடுத்துள்ள பல முதலீட்டாளர்கள் அரசு மானியம் வழங்காததால் ஆர்டர்களை ரத்து செய்துள்ளனர்.
அவை நவீன ஜவுளி தொழில் நுட்பம் வளருவதற்கு தடையாக உள்ளன. எனவே பிரதமர் மன்மோகன் சிங் ஜவுளித்துறை கூட்டத்தில் அறிவித்தபடி மத்திய அரசு உயர்தொழில்நுட்ப மேம்பாட்டுநிதி திட்டத்தின் கீழ் மானியம் வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.