'என் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய செயல் நேற்று நடந்துள்ளது; அதிலிருந்து நான் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளேன்' என்று அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதன் பின்னணியில் முதல்வர் கருணாநிதி, அவருடைய மகன் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இருக்கலாம் என்ற சந்தேகம் தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னையில் அ.இ.அ.தி.மு.க.வின் 36ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அளித்த நேர்காணலின் விவரம் வருமாறு:
“நான், விடுதலைப்புலிகளை தமிழகத்தில் இருந்து அகற்றி உள்ளேன். அந்த இயக்கத்தை தடை செய்ய வலியுறுத்தி இருக்கிறேன். தமிழ்நாடு விடுதலைப்படை, தமிழ்நாடு மீட்பு படை மற்றும் நக்சல்கள் போன்ற தீவிரவாத, பயங்கரவாத இயக்கங்களை தடை செய்திருந்தேன்.
இதனால் என் உயிருக்கு ஆபத்து வரும் என்று அறிந்த மத்திய உளவுத்துறை எனக்கு கருப்பு பூனை பாதுகாப்பு கொண்ட இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பை அளித்துள்ளது. ஆனால் மாநில காவல்துறை உரிய காவலர்களை எனது பாதுகாப்பிற்கு வழங்கவில்லை.
என்னைப் போலவே இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் வீட்டிற்கு அந்த மாநில காங்கிரஸ் அரசாங்கம் பாதுகாப்பு பணிக்கு 65 காவலர்களை நியமித்துள்ளது. இதை ஐதராபாத் சென்றபோது நானே நேரில் பார்த்தேன்.
ஆனால் என்னுடைய வீட்டிற்கு முன்புறம் ஒருவர், பின்புறம் ஒருவர், பக்கவாட்டில் ஒருவர் என்று 3 போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று அடையாளம் தெரியாத ஒருவர் என்னுடைய வீட்டிற்குள் புகுந்து மேல்மாடிக்கு வந்து அலுவலக அறையை தாண்டி நூலகம் வரையிலும் வந்து இருக்கிறார்.
இதை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. அவர் மிடுக்கான உடை அணிந்து பார்ப்பதற்கு போலீசோ அல்லது ராணுவ அதிகாரியோ என்று நினைக்கும் அளவுக்கு தோற்றம் கொண்டவராக இருக்கிறார்.
வந்த நபருக்கு என் வீட்டில் உள்ள அறைகளின் வழி எப்படி தெரியும்? மாடிக்கு எப்படி அவரால் வர முடிந்தது. அவர் நூலக அறைக்கு வந்தபோது யாரும் இல்லை என்றால் அதற்கு அடுத்த அறையான என்னுடைய அறைக்குள் நுழைந்து இருப்பார். நான் அப்போது என் அறையில்தான் இருந்தேன். அப்படி அந்த நபர் என் அறைக்குள் வந்திருந்தால், என்ன நடந்திருக்கும் என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
நடைபெற்ற சம்பவங்களை நினைக்கும் போது நான் தெய்வாதீனமாகத்தான் உயிர் தப்பியிருக்கிறேன். இது தொடர்பாக எனக்கு கிடைத்த தகவலை நான் பகிர்ந்துகொள்கிறேன்.
எல்லா இடங்களிலும் என் நலன் விரும்பிகள் இருக்கிறார்கள். நான் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் சில நாட்களுக்கு முன்பு என்னிடம் தெரிவித்த கருத்தைத்தான் நான் இப்போது உங்களிடம் கூறுகிறேன்.
அண்மையில், முதலமைச்சர் கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலினுக்கு ஒரு அறிவுரை வழங்கியிருக்கிறார். தமிழ்நாட்டில் அடுத்த சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும்போது நான் உயிரோடு இருக்க மாட்டேன். எனவே இப்போது நம்மோடு உள்ள கூட்டணிக் கட்சிகளை நீ விட்டுவிடாமல் பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நீ பெரும் துன்பங்களையும், துயரங்களையும் எதிர்கொள்ள வேண்டி வரும் என்று சொல்லியிருக்கிறார். இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், அடுத்த தேர்தல் வரும்போது ஜெயலலிதா உயிரோடு இருந்தால்தானே என்று பேசியதாக எனக்கு தகவல் கிடைத்திருக் கிறது. நேற்று என் வீட்டில் இத்தகைய சம்பவம் நடைபெற்றதால், இதனை சொல்கிறேன்.
முதலமைச்சர் சார்பாக பேசிய அமைச்சர் ஆற்காடு வீராசாமி, நான் (ஜெயலலிதா) முதலமைச்சராக இருந்தபோது, முன்னாள் முதலமைச்சருக்கு என்ன பாதுகாப்பு வழங்கப்பட்டதோ அதே பாதுகாப்புதான் இப்போது எனக்கு அவர் வழங்கியிருப்பதாக கூறுகிறார்.
நேற்று என் வீட்டுக்குள் நுழைந்த நபர் வேலை கேட்டு வந்ததாக சொல்கிறார்கள். நடந்திருப்பது மிகப்பெரிய தவறு. இதன் தீவிரத்தை குறைக்கவும், மக்களை திசை திருப்பவும் ஆற்காடு வீராசாமி தெரிந்தே பொய்சொல்கிறார்.
மாநில அரசும், முதலமைச்சரும் தவறு செய்திருக்கிறார்கள். நான் நேற்று உயிருடன் தப்பியதே தெய்வாதீனமானது. வேலை கேட்கும் ஒருவன்தான் பூட்ஸ் காலோடு நேராக மாடிக்கு வருவானா? இவனைப் போலீசார் உள்ளே அனுப்பியது எப்படி? இதன் பின்னணியில் கருணாநிதி ஸ்டாலின் நடத்தியஆலோசனை என் நினைவுக்கு வருகிறது. இதனை உங்கள் (நிருபர்கள்) முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
எனக்கு பாதுகாப்பு வேண்டுமென நானே கேட்க வேண்டிய தேவையில்லை. ஏற்கனவே உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, மாநில அரசு செயல்பட வேண்டும். நேற்றைய நிகழ்விற்குப் பிறகு இது தொடர்பாக உள்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்”.