தமிழக அரசை கண்டித்து மாநில அளவில் போராட்டம் நடத்தப்போவதாக வருவாய்த்துறை அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர்.
வருவாய்த்துறை அலுவலர்களின் கோரிக்கைகளை நிராகரித்து வரும் தமிழக அரசை கண்டித்து இன்று முதல் 15 நாட்கள் மாநிலம் முழுவதும் பிரச்சார இயக்கமும், 22ம் தேதி சென்னையில் உண்ணாவிரதமும் நடக்கிறது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் ராஜ்குமார் கூறியதாவது, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் நிலுவையிலுள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம் நடத்தியும் இதுவரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
இரண்டு ஏக்கர் நிலம் வழங்குதல், ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு வழங்குதல், இலவச வீட்டு மனை பட்டா, இலவச சமையல் எரிவாயு, அடுப்பு வழங்குதல், இலவச "டிவி' வழங்குதல் உட்பட பல்வேறு வளர்ச்சி பணிகளில் வருவாய்த்துறை அலுவலர்கள் இரவு, பகல் பாராது வேலை பார்த்து வருகின்றனர்.
மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட துணை ஆட்சியர், தாசில்தார், துணை தாசில்தார், உதவியாளர், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் ஆகிய நிலைகளில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது. இது வருவாய்த்துறையில் உள்ள மொத்த பணியாளர்களின் மூன்றில் ஒரு பங்கு. வருவாய் ஆய்வாளர்கள், மண்டல துணை தாசில்தார்கள் ஆகியோருக்கு மாதந்தோறும் வழங்க்கூடிய ரூ.250 மொபைல்ஃபோன் கட்டணம் பல மாதங்களாக வழங்கவில்லை. கடந்த 2003ல் வேலை நிறுத்த போராட்டத்தின் போது நியமனம் செய்த தற்காலிக இளநிலை உதவியாளர்களை பணிவரன் முறை செய்து நிரந்தரம் செய்ய வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் வருவாய்த்துறை நிர்வாகத்தில் அரசியல் குறுக்கீடு அதிகரித்து வருவதோடு தாக்கப்பட்டு வருகின்றனர். ஆகவே, பாதுகாப்பு வழங்க வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடவேண்டும். மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள லட்கணக்கான பணியிடங்களை பூர்த்தி செய்து வேலையற்ற இளைஞர்களுக்கு பணி வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறும். வரும் 30ம் தேதி அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று (15ம் தேதி) முதல் 27ம் தேதி வரை மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கமும், 22ம் தேதி சென்னையில் மாநில, மாவட்ட, வட்டக்கிளை நிர்வாகிகள் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டமும் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.