கூட்டணி அரசுகள் ஆட்சி செய்து வரும் நிலையில் புதிய அரசியல் அமைப்பு சட்டம் தேவை என்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.கருணாநிதி கூறியுள்ளார். இந்த புதிய அரசியல் சட்டத்தை உருவாக்குவதற்கான அரசியல் சாசன நிர்ணய சபை அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், இந்தியா கூட்டாட்சி முறைக்கு மாற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நமது அரசியல் சட்டம் பல முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்றும், அரசியல் சட்டத்தில் உள்ள குறைபாடுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் சரி செய்யப்பட வேண்டும் என தாம் கருதுவதாக கருணாநிதி கூறியுள்ளார்.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ராமர் பால விவகாரத்தில் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால் ராமர் பாலத்தை இடிப்பதில் எந்த தவறும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை பொறுத்த வரையில் இடதுசாரிகள் தங்களது எதிர்ப்பு குரலை எழுப்புவதற்கு முன்பாகவே அந்த ஒப்பந்தம் குறித்து தமக்கு ஆட்சேபனைகள் இருந்ததாக கருணாநிதி கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தம் முக்கியமல்ல, அரசே முக்கியம் என்றும், இந்த ஒப்பந்தம் தொடர்பாக தமக்கு சில சந்தேகங்கள் உண்டு. எனவே இடதுசாரிகளுக்கு ஆதரவாக தாம் பேசியதுடன் அவர்களுக்கு ஆதரவாக சோனியா மற்றும் பிரதமருடன் தாம் பேசியதாகவும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் இந்த பிரச்சனை தொடர்பாக இடதுசாரி தலைவர்களுடன் குறிப்பாக பிரகாஷ் கரத்துடன் தாம் ஆலோசனை நடத்தியதாகவும், இந்த பிரச்சனையில் உறவுகள் பாதிக்கப்பட கூடாது என்றும், எஞ்சியுள்ள இரண்டு ஆண்டு ஆட்சி மூலம் நாட்டில் சேவையாற்ற வேண்டும் என்றும் தாம் கூறியதாக கருணாநிதி தெரிவித்தார்.
இதன் காரணமாகவே தாம் இடதுசாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக அவர் கூறியுள்ளார்.