பள்ளிகளில் மாணவர்கள் செல்பேசிகளை பயன்படுத்த 2 நாளில் தடை விதிக்கப்படுகிறது.
தமிழகத்தில் மாணவர்களிடையே செல்பேசி மோகம் அதிகரித்து வருவதால் பெற்றோர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுகிறது. செல்பேசி மூலம் ஆபாச எஸ்.எம்.எஸ்.கள், ஆபாச படங்கள் அனுப்புவது அதிகரித்துள்ளது.
இதுபோன்ற குற்றங்களை தடுக்கவும், இளைய சமுதாயத்தினரை காக்கவும் பள்ளிகளில் செல்பேசி பயன்படுத்த தடை விதிக்கவேண்டும் என்று சிபிசிஐடியினர் அரசுக்கு சிபாரிசு செய்தனர். இதை அரசு தீவிரமாக பரிசீலித்து பள்ளிகளில் செல்பேசி பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் செல்போனுக்கு தடை விதிக்கப்படுகிறது.
இதற்கான அறிவிப்பு 2 நாளில் விரைவில் வெளியாகிறது. வரும் 17ஆம் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது. அதற்கு முன் இந்த அறிவிப்பு வெளியிட பள்ளிகல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அடுத்த கட்டமாக கல்லூரிகளிலும் செல்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று தமிழக பள்ளி கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சில பெற்றோர் இந்த தடை உத்தரவை சில மாற்றங்களுடன் அமுல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் பள்ளிக்குள் நுழையும் போது செல்பேசிகளை பள்ளி நிர்வாகம் வாங்கி வைத் துக்கொண்டு அவர்கள் திரும்பி செல்லும் போது ஒப்படைத்து விடவேண்டும்.
இதன் மூலம் தங்கள் பிள்ளைகள் எங்கு இருக்கிறார்கள் எப்போது வருகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். அவர்களுடன் தாங்களும் தொடர்பு வைத்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் பெற்றோர்கள் கருதுகிறார்கள். இந்த யோசனைகளையும் அரசு பரிசிலீத்து வருகிறது.