தமிழகத்தில் கிராம நிர்வாக உதவியாளர்கள் இடம் நிரப்பபட்டு வருவதாக ஈரோட்டில் வருவாய்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
ஈரோட்டில் ஐந்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட விவசாயத் தொழிலாளர்கள் நல வாரிய மண்டல ஆய்வுக் கூட்டம் நடந்தது. நிலச் சீர்திருத்த ஆணையர் உறுப்பினர் பிரபாகர ராவ் வரவேற்றார். கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் பேசினர். ஆட்சித் தலைவர்கள் ஈரோடு உதயச்சந்திரன், நாமக்கல் சுந்தரமூர்த்தி, நீலகிரி சந்தோஷ் மிஸ்ரா, கரூர் வெங்கடேஷ், கோவை நீரஜ்மித்தல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விவசாய தொழிலாளர் நல வாரியம் சார்பில், ஈரோடு, கோவை, நீலகிரி, நாமக்கல், கரூர் ஆகிய ஐந்து மாவட்டங்களை சேர்ந்த 225 பயனாளிகளுக்கு ரூ.26.42 லட்சம் மதிப்பிலான நல உதவிகளை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் நல வாரியம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரையுள்ள காலக்கட்டத்தில், ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு கல்வி, மருத்துவம், திருமண உதவி, முதியோர் உதவித்தொகை, இயற்கை மரணம், விபத்தால் மரணம் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ரூ. 65 கோடிக்கு மேல் வழங்கியுள்ளது.
ஈரோடு மண்டலம் சார்பில் விவசாயத் தொழிலாளர்களுக்கு, வருவாய்த் துறை மூலமாக ரூ.2.67 கோடியும், கல்வித்துறை மூலமாக ரூ.25 லட்சமும், சுகாதாரத் துறை மூலம் ரூ. 3.54 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே ரூ.1.76 கோடிக்கு நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. "குடியிருப்பவருக்கு வீடு' என்ற திட்டத்தின் கீழ், பட்டா கொடுக்க சிறப்பு திட்டம் தீட்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
2008 மார்ச் 31ம் தேதிக்குள் 3 லட்சம் பேருக்கு பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1.54 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 5 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் ஒரு கோடியே 59 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வீடு உள்ளவர்களுக்கு பத்திரம் வழங்கும் பணி நடந்து வருகிறது. நில எடுப்பு சம்பந்தப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் சம்பந்தப்பட்டவர்கள் ஆட்சித் தலைவர்களிடம் பேசி நல்ல முடிவெடுத்தால் பத்திரம் கொடுத்து விடலாம்.
கிராம நிர்வாக உதவியாளர்கள் பணியிடம் நிரப்பப்பட்டு வருகிறது. பதவி உயர்வு அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவர். 100 ஆண்டு பழமையான அரசு கட்டிடங்கள் பல இடங்களில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன என்றார்.