சேதுசமுத்திர திட்ட‌ம் முடி‌ந்துபோன கதை: ஜெயலலிதா!

Webdunia

வியாழன், 11 அக்டோபர் 2007 (14:55 IST)
சேதுசமுத்திர திட்டம் ஒரு முடிந்து போன கதை; இனி தொடர்வதற்கு வாய்ப்பே இல்லாத விஷயம் என்பது கருணாநிதிக்கு நன்கு தெரிந்தும் இந்தத் திட்டத்தைப் பற்றி கூறி வருகிறார் எ‌ன்று அ.‌‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

சேது கால்வாயின் மொத்த ஆழம் 12 மீட்டர் அல்லது 36 அடி மட்டிலுமே ஆகும். இதில் 30,000 டன்னுக்கும் எடை குறைவாக உள்ள கப்பல்கள்தான் போக முடியும். ஆனால், தற்போது 1,50,000 டன்னுக்கும் அதிகமாக உள்ள பிரம்மாண்டமான கப்பல்கள்தான் கட்டப்பட்டும், அதிக அளவில் பயன்படுத்தப்பட்டும் வருகின்றன எ‌ன ஜெயல‌லிதா கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர்.

இவ்வகை கப்பல்கள் இக்கால்வாயில் செல்ல முடியாது. அதிக எடை கொண்ட கப்பல்கள் செல்லக் கூடிய அளவில் கால்வாயின் ஆழமோ அல்லது அகலமோ கொண்ட திட்டமாக இது செயல்படுத்தப்படவில்லை என்பது இத்திட்டத்தில் உள்ள மிகப்பெரிய குறைபாடு ஆகும். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை செலவிட வழி வகுத்ததைத் தவிர இத்திட்டத்தில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை; பலனும் இல்லை எ‌ன்று ஜெயல‌‌லிதா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

என்றைக்கு ராமரைப் பற்றி இழிவாகப் பேசினாரோ, அன்றில் இருந்து வட மாநிலங்களில் வாழும் தமிழர்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லக் கூடிய தமிழர்களுக்கு அங்கு பாதுகாப்பு இல்லை என்பது கருணாநிதிக்கு நன்கு தெரியும். கருணாநிதிக்கு, டெல்லிக்குச் சென்று ஒரு பொதுக்கூட்டத்தில் ராமரைப் பற்றி இங்கு சொன்ன கருத்தை அங்கும் சொல்லக் கூடிய தைரியம் இருக்கிறதா? என்று அங்குள்ளவர்கள் கேட்கிறார்கள். இதற்கு அவர் தயார் என்றால், அவரது பயணச் செலவை அ.தி.மு.க. ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறது என ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்