தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்பு தலைவர்களுக்கு எதிராக கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக மிரட்டி வருவதால் தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் உள்ளாட்சி அமைப்பிற்கான தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றிற்கான தலைவர்களை மக்களே வாக்களித்து தேர்ந்தெடுக்கும் சட்டம் பின்பற்றப்பட்டது. து
ணை தலைவர்களை மட்டும் கவுன்சிலர்கள் வாக்களித்து தேர்வு செய்வர். இந்த சட்டம் பின்பற்றப்பட்டதால் தேந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் யாருக்கும் பயப்படாமல் செயல்பட்டு வந்தனர்.
கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தலைவர்களை கவுன்சிலர்கள் வாக்களித்து தேர்வு செய்யும்முறை பின்பற்றப்பட்டது. இதன் காரணமாக தற்போது தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள் கவுன்சிலர்களுக்கு பணிந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த காலங்களில் இதேபோல் தலைவர்களை கவுன்சிலர்கள் தேர்வு செய்யும் நிலை இருந்தபோது தேர்வு செய்யப்பட்ட முதல் ஆறு மாதத்திற்கு தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரமுடியாது என்று சட்டம் இருந்தது.
மேலும் 60 சதவீதம் கவுன்சிலர்கள் எதிர்ப்பு இருந்தால் அந்த தலைவர்மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரலாம் என இருந்தது. தற்போது இதில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது தலைவர் பதவி ஏற்ற முதல் ஓராண்டு மற்றும் கடைசி ஓராண்டிற்கு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரமுடியாது. அடுத்து தலைவர் மீது 80 சதவீதம் எதிர்ப்பு இருந்தால் மட்டுமே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரமுடியும் என்று மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இம்மாத இறுதியுடன் உள்ளாட்சி தலைவர்கள் பதவியேற்று ஓராண்டு நிறைவு பெறுகிறது. ஆகவே தலைவர் மீது 80 சதவீதம் கவுன்சிலர்கள் எதிர்ப்பு இருந்தால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளதால் தற்போது பதவியிலுள்ள தலைவர்கள் கவுன்சிலர்களிடம் பணிவுடன் நடந்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான பகுதியில் இம்மாதம் முடிந்தவுடன் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவும் தயாராக உள்ளனர் என்பதே தமிழகத்தில் தற்போதைய உள்ளாட்சி அமைப்புகளின் நிலையாகும்.