இந்தியாவில் சிறந்த மாநகராட்சியாக சென்னை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், ஐதராபாத், பெங்களூர் ஆகிய 7 மாநகராட்சிகளை, மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு துறை மற்றும் மராட்டிய மாநிலத்தின் முன்னாள் தலைமை செயலாளர் சுக்பங்கர் தலைமையிலான மத்திய அரசு உயர் அலுவலர்கள் குழு ஆய்வு செய்தது. இதில் சென்னை மாநகராட்சியை இந்தியாவில் சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்தது என்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கான முதல் பரிசளிப்பு விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமை தாங்கினார். மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.ஜெயபால் ரெட்டி, சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியனிடம் கேடயத்தை வழங்கினார். அப்போது சென்னை மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி உடன் இருந்தார்.
சென்னை மாநகராட்சி வரி வசூலை கம்ப்யூட்டர் மயமாக்கியதையும், வெட்டியான்கள் அரசு ஊழியர்கள் ஆக்கப்பட்டதற்காகவும், 24 மணி நேரத்திற்குள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வழங்கியதற்காகவும், மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்விக்கு உதவி தொகை வழங்கியதற்காகவும், வணிக உரிமம் வழங்குவதற்காகவும், ஒப்பந்தங்கள் பெறும் முறையை கம்ப்யூட்டர் மயமாக்கியதற்காகவும், பொது சுகாதாரத்துறை, குடும்ப நலத்துறை சிறந்த முறையில் பணியாற்றியதற்காகவும், நவீன முறையில் ஆட்டிறைச்சிக் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதற்காகவும், சிறந்த திட்டப்பணிகளுக்காகவும், கணக்கியல் முறைகளுக்காகவும் தேர்வு செய்யப்பட்டு, சென்னை மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டது.