பி.எஸ்.என்.எல். மூலம் அரசு கேபிள் டி.வி.!

Webdunia

செவ்வாய், 9 அக்டோபர் 2007 (12:07 IST)
''பி.எஸ்.என்.எல். நிறுவனம் பதித்துள்ள கண்ணாடி இழை கேபிள் மூலம் அரசு கேபிள் டி.வி. இணைப்பை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது'' எ‌ன்று அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் நிறுவன‌த்‌தி‌ன் தலைவ‌பிரிஜேஷ்வர் சிங் கூ‌றினா‌ர்.

அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் என்ற பெயர் பதிவு செய்யப்பட்டு அதற்கான அனுமதி கிடைத்துள்ளது. இந்த நிறுவனத்துக்கு சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது தனியார் தொலை‌க்காட‌்‌சி ஆபரேட்டர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஒளிபரப்புக்கு தேவையான ஆன்டெனா மற்றும் கருவிகள் டெண்டர் வெளியிடப்பட்டு வாங்கப்படும் எ‌ன்று பிரிஜேஷ்வர் சிங் தெ‌ரி‌வி‌த்தார்.

தொலை‌‌க்கா‌ட்‌சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி கட்டண விவரங்கள் இறுதி செய்யப்படும். எந்தெந்த ஊர் களில் கட்டுப்பாட்டு அறை அமைப்பது என்பது பற்றி முடிவு செய்து அதற்கு உரிய பணிகள் தொடரப்படும். ஒளிபரப்பு கருவிகள் அமைக்க ஒரு கட்டுப்பாட்டு அறைக்கு ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை செலவு ஆகும். தமிழ்நாட்டில் தற்போது 86 ‌விழு‌க்காடு வீடுகளில் தொலை‌க்கா‌ட்‌சி உள்ளது. இலவச தொலை‌க்கா‌ட்‌சி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதால் விரைவில் தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளிலும் தொலை‌க்கா‌ட்‌சி இருக்கும். எனவே கேபிள் இணைப்பு பெறுவோர் எண்ணிக்கை அதிகமாகும் எ‌ன்றா‌ர் ‌பி‌ரிஜே‌ஷ்வ‌ர் ‌சி‌ங்.

அரசு கேபிள் டி.வி. இணைப்புக்காக தமிழ்நாடு முழுவதும் தனியாக கேபிள் அமைக்கப்படாது. அதற்குப் பதிலாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஏற்கனவே மாநிலம் முழுவதும் பதித்துள்ள கண்ணாடி இழை (பைபர்ஆப்டிக்) கேபிள் மூலம் அரசு கேபிள் டி.வி. இணைப்பை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கேபிள் ஆபரேட்டர்கள் வீடுகளுக்கு கேபிள் டி.வி. இணைப்பை வழங்குவார்கள் என அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

டி.டி.எச். எனப்படும் வீடுகளுக்கு நேரடி ஒளிபரப்பு சேவை அளிக்கும் தொழில்நுட்பம் தற்போது நகரங்களில் மட்டும் பிரபலமாக உள்ளன. இதை நடத்தும் நிறுவனங்கள் நஷ்டத்தில்தான் செயல்படுகின்றன. எனவே தேவைப்பட்டால் இது போன்ற இணைப்பை வழங்குவது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும் எ‌ன்று‌ம் அ‌வ‌ர் கூ‌றினா‌ர்.

தமிழ்நாடு முழுவதும் சிறப்பான தெளிவான ஒளிரப்பை வழங்கும் வகையில் அதிநவீன கருவிகள் மூலம் அரசு கேபிள் ஒளிபரப்பு வழங்கப்படும். நகர், கிராம மக்கள் ரசனைக்கு ஏற்ப நேஷனல் ஜியாகிராபி, ஸ்டார் டிவி போன்ற சேனல்களும், 12 தமிழ் தொலைக்காட்சி சேனல்களும், தெரியும் வகையில் சேனல்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் எற்கனவே இந்த தொழில் செய்துவரும் நிறுவனங்களுக்கு போட்டியாக அமையும் வகையில் செயல்படும். முதல் ஆண்டிலேயே லாபம் பெறும் வகையில் இதன் செயல்பாடுகள் அமையும். கட்டுப்பாட்டு அறையை நிர்வகிக்கும் தொழில்நுட்ப வல்லுனர்கள், கேபிள் ஆபரேட்டர்களிடம் பணம் வசூலித்தல், அன்றாட அலுவல்களை கவனிப்பது போன்ற பணிகளுக்காக ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் எ‌ன மே‌லு‌ம் ‌தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

எந்த ஆட்சி வந்தாலும் இந்த நிறுவனம் தொடர்ந்து செயல்படும். அந்த அளவில் தேவையான உறுதியான அடித்தளத்துடன் அரசு கேபிள் டிவி. நிறுவனம் உருவாக்கப்படுகிறது எ‌ன்று அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் நிறுவன தலைவ‌ர் பிரிஜேஷ்வர் சிங் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்