ராமர் பாலத்தை தகர்‌ப்போ‌ம்: திருமாவளவன்!

Webdunia

செவ்வாய், 9 அக்டோபர் 2007 (10:54 IST)
"ஒரு தமிழனை அழிப்பதற்காக வட மாநிலத்தில் இருந்து படையெடுத்துச் சென்ற ராமன், அதற்காக கட்டிய பாலம் ராமர் பாலம் என்றால், நம்முடைய விரோதி கட்டிய ராமர் பாலம் என்று ஒன்று இருந்தால், அதனை வெடிகுண்டு வைத்து தகர்க்கவும் தயா‌ர்'' என்று விடுதலை சிறுத்தைகள் இயக்க பொதுச்செயலாளர் திருமாவளவன் கூறினார்.

சேலம் கந்தம்பட்டியில் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவிலில் அந்த பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் சென்று சாமி கும்பிட அனுமதி மறுக்கப்ப‌ட்டு வ‌ந்தது. அதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் இயக்க பொதுச்செயலாளர் திருமாவளவன் தலைமையில் கோவில் நுழைவு போராட்டம் நே‌ற்று நட‌ந்தது.

அ‌ப்போது தொண்டர்கள் மத்தியில் திருமாவளவன் பேசுகை‌யி‌ல், கந்தம்பட்டி திரவுபதி அம்மன்கோவில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான கோவில்களில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை உள்ளே நுழைய அனுமதிப்பதில்லை என்பதே உண்மை. இங்கு நடத்தும் போராட்டம் மூலமாக இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு ஏற்பட வேண்டும். தமிழ்நாட்டின் எல்லா கோவில்களின் கதவுகளும் நம் சமுதாய மக்களுக்கு திறக்க வேண்டும் எ‌ன்றா‌ர்.

ராமர் பாலம் இருப்பதாக சொல்லி சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றவிடாமல் முட்டுக்கட்டை போடும் சக்திகள்தான் கோவிலுக்குள் தலித்துகளை நுழையவிடாமல் தடுக்கின்றன. எனக்கு ராமர் மீதே நம்பிக்கை கிடையாது. ராமர் மீது மட்டுமல்ல எனக்கு கடவுள் நம்பிக்கையே கிடையாது எ‌ன்றா‌ர் ‌திருமாவளவ‌ன்.

ராமன் என்பவன் யார்? ராவணனை அழிக்க இலங்கைக்கு, குரங்குகளின் துணையோடு படையெடுத்து சென்றவன். ராவணன் யார், நம்முடைய முப்பாட்டன். தமிழன், தமிழ்ச்சங்கம் வளர்த்து தமிழை வளர்த்தவன். ஒரு தமிழனை அழிப்பதற்காக வட மாநிலத்தில் இருந்து படையெடுத்துச் சென்ற ராமன், அதற்காக கட்டிய பாலம் ராமர் பாலம் என்றால், நம்முடைய விரோதி கட்டிய ராமர் பாலம் என்று ஒன்று இருந்தால், அதனை வெடிகுண்டு வைத்து தகர்க்கவும் திருமாவளவன் தயார் எ‌ன்றா‌ர்.

ஆனால் ராமர் பாலம் என்று ஒன்றே கிடையாது. அது கற்பனையான ஒன்று. எனவே நாம் அங்கே போகத் தேவையே இல்லை. எனவே போலீசார், திருமாவளவன் ராமர்பாலத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்பதாக பேசினார் என்று கூறி என்மீது வழக்கு எதுவும் போட்டுவிட வேண்டாம் எ‌ன்று ‌திருமாவளவ‌ன் கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

திரவுபதி அம்மன் கோவிலுக்குள் சென்று அம்மனை வழிபடுவது என்பது அந்த அம்மன் மீது நம்பிக்கை வைத்துள்ள அந்த பகுதி தலித் மக்களின் அடிப்படை உரிமையாகும். அதை தடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. எனவேதான் நாம் இப்போது கோவில் நுழைவு போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம் எ‌ன்று ‌திருமாவளவ‌ன் தெ‌ரி‌‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்