ஈரோடு அருகே நகராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

Webdunia

திங்கள், 8 அக்டோபர் 2007 (12:53 IST)
சூரம்பட்டி நகராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி 11 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு திருப்பூர் மண்டல நிர்வாக இயக்குனரிடம் மனு வழங்கினர்.

ஈரோடு நகரை தொட்டவாறு உள்ளது சூரம்பட்டி நகராட்சி. இந்த நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. நகராட்சி வார்டுகளில் சேரும் குப்பையை கொட்டவும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உரமாக்கவும், கவுண்டச்சிபாளையம் பஞ்சாயத்தை சேர்ந்த தொட்டிபாளையத்தில் 2.5 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.

ஜனவரி மாதம் முதல் தொட்டிபாளையத்தில் குப்பை கொட்டப்பட்டது.
குப்பை கொட்டும் இடத்தில் மே மாதம் 20 அடி அகலம், நூறு அடி நீளம், 20 அடி ஆழத்துக்கு மெகா குழி தோண்டப்பட்டு அதிலிருந்த மண் அள்ளப்பட்டது. அதிக நீரோட்டம் உள்ள பாசனப்பகுதியில் பெரிய குழி தோண்டியதால், குழியில் நீர்க்கசிவு ஏற்பட்டது.

குழியில் நகராட்சி நிர்வாகத்தினர் குப்பைகளை கொட்டினர். குப்பையுடன், நீர் கலந்து துர்நாற்றம் வீசியது. நிலத்தடி நீர்மட்டமும் மாசடைந்து பல்வேறு தொற்று நோய்களை ஏற்படுத்தியது.

இதையடுத்து மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொட்டிபாளையம் கிராம மக்கள் குப்பை கொட்ட வந்த லாரியை முற்றுகையிட்டு சிறைபிடித்தனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் இனி குப்பை கொட்ட மாட்டோம் என உறுதியளித்த பின் லாரி விடுவிக்கப்பட்டது.

குப்பை கொட்ட வேறு இடம் கிடைக்காமல் சூரம்பட்டி நகராட்சி வார்டுகளில் குப்பை அள்ள முடியாமல் தெருக்களில் குப்பை தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டது.

தலைவர் மற்றும் செயலஅலுவலர்கள் இருவரும் தன்னிச்சையாக குப்பை கொட்டும் இடத்தில் மண்ணை திருடியதாக கவுன்சிலர்கள் புகார் கூறினர். அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. குப்பை கொட்டும் இடத்தில் மண் அகற்றப்பட்டதன் மூலம் நகராட்சி இதுவரை செலவழித்த ரூ. 10 லட்சம் வீணடிக்கப்பட்டது. தொடர்ந்து இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்காத நிலையில் சுடுகாட்டில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. சுடுகாடு முழுவதும் குப்பை நிறைந்து பிணங்களை புதைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதுவும் வரும் 13ம் தேதியுடன் அங்கு குப்பை கொட்டுவதை நிறுத்திக் கொள்வதாக நகராட்சி நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் முத்துசாமி தலைமையில் சூரம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதையடுத்து நகராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கவுன்சிலர்கள் முடிவு செய்தனர். கடந்த வாரம் திருப்பூர் சென்ற நகராட்சி கவுன்சிலர்கள் 11 பேர் திருப்பூர் மண்டல அலுவலகம் சென்றனர். சம்பந்தப்பட்ட மண்டல உதவி இயக்குனர் இல்லாததால் அலுவலக கண்காணிப்பாளரிடம் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த மனுவை வழங்கினர்.

நேற்று முன்தினம் மீண்டும் அ.தி.மு.க., கவுன்சிலர் ஜெகதீஸ் தலைமையில் திருப்பூருக்கு சென்ற கவுன்சிலர்கள் மண்டல உதவி இயக்குனர் பாலசந்திரனிடம் மனுவை கொடுத்தனர். மனுவை பெற்ற பாலச்சந்திரன் கவுன்சிலர்களிடம் 15 நாட்களில் இதுகுறித்து தாக்கீது அனுப்புவதுடன் ஒரு மாதத்துக்குள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நடவடிக்கை அளிப்பதாக உறுதி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்