ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமையை மீட்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் சென்னையில் இன்று பேரணி நடைபெற்றது.
சென்னை அண்ணாசாலை மன்றோ சிலையில் இருந்து தலைமைச் செயலகத்தை நோக்கி இன்று காலை புறப்பட்ட இப்பேரணிக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தொடங்கி வைத்தார்.
பழ. நெடுமாறன் கூறுகையில், "ஈழத் தமிழர்கள் உணவு, மருந்து கிடைக்காமல் நோய் வாய்பட்டு பாதிக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவ வேண்டிய ஜனநாயக கடமை மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு இருக்கிறது. ஈழத் தமிழர்களுக்காக பேரணி நடத்துகிற மருத்துவர் கிருஷ்ணசாமியை பாராட்டுகிறேன் என்றார்.
இப்போராட்டம் குறித்து மருத்துவர் கிருஷ்ணசாமி கூறுகையில், ஈழத் தமிழர்கள் சுயநிர்ணய உரிமைக்காக 30 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் பாராமுகமாக இருந்து வருகிறது. மனிதாபிமான அடிப்படையில் உணவு, மருந்து போன்றவற்றை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
ஆனால் தமிழகத்தில் இருந்து பல்வேறு அமைப்புகள் சேகரித்து கொடுத்த உணவு, மருந்துகளை இலங்கைக்கு அனுப்ப முடியவில்லை. இந்த நிலை தொடர்ந்து நீடிக்கக் கூடாது. மத்திய அரசு இதில் தலையிட வேண்டும். இதை வலியுறுத்தி இன்று பேரணி நடத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு இதில் கவனம் செலுத்தவில்லை என்றால் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் அமைப்புக்கள் போராட்டம் நடத்தக்கூடிய நிலை ஏற்படும் என்றார்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராகவும் பேரணியில் பங்கேற்றோர் முழக்கமிட்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், பாரதிய ஜனதா கட்சியின் குமாரவேலு உள்ளிட்டோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.