சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்களைவிட நீதிமன்றங்களால் அவற்றின் தீர்ப்புகள் மூலம் உருவாகும் சட்டங்கள் அதிகரித்து வருவது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மாநிலத்தின் நலனுக்காகவும், மக்களின் முன்னேற்றத்திற்காகவும் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும் போராடுவது ஜனநாயகம் வழங்கியுள்ள உரிமையாகும். 1997-ஆம் ஆண்டு குறிப்பிட்ட ஒரு பிரச்சனைக்காக நடத்தப்பட்ட போராட்டத்தை கேரள உயர் நீதிமன்றம் சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்தது. இதையே உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதுவே இன்றைக்கு பொதுவான சட்டமாக மாறி இருக்கிறது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
அதன் விளைவால்தான் சேதுசமுத்திரத் திட்டத்திற்காக அக்டோபர் 1-ஆம் தேதி முழு வேலை நிறுத்தம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. பொதுவாக சட்டங்கள் இரண்டு வகைப்படும். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களால் இயற்றப்படுவது ஒரு வகை. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காலப்போக்கில் உருவாகும் சட்டங்கள் மற்றொரு வகை. இப்படி சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்களைவிட நீதிமன்றங்களால் அவற்றின் தீர்ப்புகள் மூலம் உருவாகும் சட்டங்கள் அதிகரித்து வருவது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல. சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் மக்கள் பிரதிநிதிகள் விவாதித்து நிறை குறைகளை ஆய்வு செய்து சட்டம் நிறைவேற்றுவதே சிறந்தது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
தனி நபராக வழக்கறிஞர்கள் எடுத்து வைக்கும் வாதங்களின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதில் பொதுநலன் குறைவு. இந்த தீர்ப்புகள் அடிப்படையில் உருவாகும் சட்டங்களை நிலையாக பயன் படுத்திக் கொள்ளக்கூடாது என பா.ம.க. நிறுவனர் தெரிவித்துள்ளார்.
27 விழுக்காடு இடஒதுக்கீடு சம்பந்தமாக மத்திய அரசு எடுத்து வைக்கும் வாதங்கள் திருப்தி அளிக்கிறது. எங்கள் கட்சியின் சார்பாக வாதம் வரும் போது எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்து வைப்போம் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.