உச்ச நீதிமன்ற நீதிபதிகளை விமர்சித்துப் பேசிய மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவை பதவி நீக்கம் செய்யுமாறு பிரதமருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியன் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்தில் முழு அடைப்பு நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. முழு அடைப்பு நடந்தால், பேருந்துகளை இயக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றமும் கூறியது.
எனினும் கடந்த 1-ஆம் தேதி சென்னையில் தி.மு.க. தலைவர்களும் கூட்டணி கட்சித் தலைவர்களும் உண்ணாவிரதம் இருந்தனர். அன்றைய தினம் பேருந்துகள் இயக்கப்படவில்லை. கடைகள் மூடப்பட்டன. மத்திய அமைச்சர் டி.ஆர் பாலுவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது அவர் நீதிமன்ற உத்தரவை விமர்சித்துப் பேசினார். நீதிபதிகள் எப்போதுமே சரியான தீர்ப்பையே சொல்வார்கள் என்று எண்ண முடியாது. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடுகிறது. நீதிமன்ற உத்தரவுகளை விமர்சிப்பதில் தவறு இல்லை என்றெல்லாம் அவர் பேசினார்.
உயர் பதவியில் இருக்கும் அவரது பேச்சு நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். அமைச்சர் பதவியில் நீடிக்கும் தகுதி அவருக்கு இல்லை. எனவே அவரைப் பதவி நீக்கம் செய்யுமாறு பிரதமருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
மேலும் நீதிமன்றத்தை அவமதித்ததாக அமைச்சர் டி.ஆர். பாலு மீது, சென்னை உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மற்றொரு வழக்கையும் பாலசுப்பிரமணியன் தாக்கல் செய்துள்ளார்.