அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அமைச்சர் இளங்கோவன் மனம் போன போக்கில் பேசுவது அழகல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி. கே. ரங்கராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“கடந்த மூன்றரை ஆண்டுக் காலமாக ஐக்கிய முற்போக்கு அரசு ஆட்சி நடத்த வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பவர்கள் இடதுசாரிகள். மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ள குறைந்தபட்ச செயல் திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றத்தான் ஆதரவு. அமைச்சர் இளங்கோவனை அமைச்சராக்கி அழகு பார்ப்பதற்கு அல்ல” என்று டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம், குறைந்தபட்ச செயல் திட்டத்துக்கு மாறானது. அதில் பாதகமான பல அம்சங்கள் உள்ளன. இது பற்றி தற்போது அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய முற்போக்கு அணி குழுவில் இடதுசாரிகளுடன் அரசு விவாதித்துக் கொண்டிருக்கிறது. இப் பிரச்சனையை மிரட்டலாக அமைச்சர் இளங்கோவன் பார்த்தால், அது அவருடைய விருப்பம் என ரங்கராஜன் கூறினார்.
“அணு சக்தி ஒப்பந்தப் பிரச்சனை குறித்து ஆரோக்கியமான விவாதத்தை நடத்தாமல் மனம் போன போக்கில் பேசுவது மத்திய அமைச்சர் இளங்கோவனுக்கு அழகல்ல” என்று டி.கே.ரங்கராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.