மக்கள் நம்பும் ராமர் பாலத்தைப் பாதுகாப்பது ஒரு பெருமையான செயலாகும் என்று கூறுகின்ற இல.கணேசன், கரசேவையின் போது இஸ்லாமியர்கள் நம்பும் பாபர் மசூதியை இடித்ததற்கு என்ன காரணம் கூறப் போகிறார் என முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசைக் கண்டித்து நீதிபதி பி.என்.அகர்வால் தமிழக அரசைக் கலைக்க மத்திய அரசு தயங்கக் கூடாது என்ற அளவிற்கு தெரிவித்த கருத்து பற்றி நீங்கள் விளக்கமாக எதுவும் இதுவரை கூறவில்லையே? என்ற கேள்விக்கு முதல்வர் கருணாநிதி பதில் அளிக்கையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறாத நிலையிலேயே ஏதோ மீறி விட்டதாக கூறும் போது, நீதிமன்றக் கருத்துக்களைப்பற்றி இப்போதல்ல, நான் எப்போதுமே கருத்து தெரிவிப்பதில்லை என்ற நிலையிலே உள்ளவன். அதனால் இப்போதும் நான் அந்த உச்ச நீதிமன்ற கருத்து பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. இதைத்தான் நான் அன்று முதல் சொல்லி வருகிறேன் என்றார்.
என்னைப் பார்த்து ஐயங்களையும் கேள்விகளையும் எழுப்புகின்றவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டுமேயானால்; தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சிகளும் அக்டோபர் 1ஆம் தேதி நடத்த அறிவித்திருந்த முழு அடைப்புக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை விதிக்க மறுத்து, அதே நேரத்தில் சில நிபந்தனைகளை மட்டும் விதித்திருந்த நிலையில்தான், இந்தக் கட்சிகளின் அனைத்து அமைப்புகளும் வேலை நிறுத்தத்திற்கான அனைத்துப் பணிகளிலும் ஈடுபட்டு விட்டனர் என்று முதல்வர் கூறியுள்ளார்.
அவர்கள் யாருக்கும் 30ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமையில் வழக்கு அவசர அவசரமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக வேறு ஒரு எதிர்மறையான தீர்ப்பை 30ஆம் தேதி மாலையில் வெளியிட்ட செய்தி தெரிந்திருக்க நியாயமில்லை. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எழுத்துபூர்வமாக 30ஆம் தேதி இரவு 10.30 மணிக்குத் தான் தலைமைச் செயலாளருக்குக் கிடைத்துள்ளது என்று முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
அந்தத் தீர்ப்பு வெளியானதற்கும், 1ஆம் தேதி காலையில் முழு அடைப்பு தொடங்குவதற்கான நேரமும் இடையிலே சில மணி நேரங்கள் தான் இருந்தன. ஆனாலும்கூட, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அது கடைப்பிடிக்கப்பட்டு சென்னையிலே தலைமைச் செயலகம் இயங்கியுள்ளது. முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் அலுவலகத்திலே பணியாற்றியிருக்கிறார்கள் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், சில பள்ளிகளும், கல்லூரிகளும் இயங்கியுள்ளன. அனைத்து புகை வண்டிகளும் ஒன்று கூட மிச்சமில்லாமல் அன்றைய தினம் ஓடியுள்ளன. விமானப் போக்குவரத்தில் எந்தவிதமான பாதிப்பும் கிடையாது.
பேருந்து ஓடுவதிலே கூட கணிசமான அளவிற்கு நேரம் அதிகமாக அதிகமாக முன்னேற்றம் ஏற்பட்டு, ஓரளவு பேருந்துகள் ஓடியுள்ளன. பொது மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் முன்கூட்டியே முழு அடைப்புக்கு தடை விதிக்கப்பட்ட செய்தி கிடைக்காத நிலையில், உச்ச நீதி மன்றம் விசாரித்து அளித்த தீர்ப்பு என்ன என்பதை தெரிந்து கொள்ள போதிய அவகாசம் இல்லாத நிலைமை.
எனவே இதுபற்றி வினா எழுப்புகிறவர்கள் சிந்தனைக்கு கொஞ்சம் இடம் கொடுத்திருந்தால் எந்தவிதமான நிந்தனைக்கும் இடம் இல்லாமல் போயிருக்கும் என்பது தான் எனது விளக்கமாகும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
பா.ஜ.க. மாநிலத் தலைவர், இல. கணேசன் வெளியிட்ட அறிக்கையில் தி.மு.க. மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியிருப்பதோடு, "முடிந்தால் வன்முறை, முடியாது போனால் அகிம்சை முறை'' என்றெல்லாம் சொல்லியிருக்கிறாரே? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், வன்முறையைப் பற்றி பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் கூறியிருப்பது ஜெயலலிதா மொழியிலே சொல்ல வேண்டுமேயானால் "நல்ல ஜோக்''. கரசேவையை நடத்தி இந்திய நாட்டில் ரத்த ஆறு ஓடச் செய்தவர்கள் - ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தையும், விஸ்வ இந்து பரிட்சத்தையும் தங்கள் சவலைப்பிள்ளைகளாக வளர்த்து வருபவர்கள் வன்முறையைப் பற்றி கருத்து கூறுவது சரியா? என்று முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனது ஆட்சியை "காமராஜர் ஆட்சி'' என்று காங்கிரஸ் தலைவர்கள் பேசி காமராஜரை அவமானப்படுத்தி விட்டதாகவும் அந்த அறிக்கையில் இல. கணேசன் சொல்லியிருக்கிறார். டெல்லியிலே காமராஜர் இல்லத்திலே புகுந்து கலகம் விளைவித்தது எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை இல.கணேசன் மறந்து விட்டாரா? மக்கள் நம்பும் ராமர் பாலத்தைப் பாதுகாப்பது ஒரு பெருமையான செயலாகும் என்று கூறுகின்ற இவர், கரசேவையின் போது இஸ்லாமியர்கள் நம்பும் பாபர் மசூதியை இடித்ததற்கு என்ன காரணம் கூறப் போகிறார் என முதல்வர் கருணாநிதி வினா எழுப்பியுள்ளார்.
சேது சமுத்திரம் பிரச்சினையில் திரும்பத் திரும்ப இவர் அந்த இடத்தில் தோரியம் போன்ற தாதுப் பொருள்கள் உள்ளன என்றும் அவை அழிக்கப்படக் கூடாது என்றும் ஒரு காரணத்தை சொல்லி வருகிறார். அந்த இடத்தையோ, அந்த இடத்தில் உள்ள மணலையோ சேது சமுத்திரம் திட்டத்திற்காக யாரும் அழிக்கப் போவ தில்லை. அந்த இடத்திலே குவிந்துள்ள மணலை அள்ளி கடலிலேயே வேறொரு இடத்தில் கொட்டத்தான் போகிறார்கள். அதனால் தோரியம் என்ற தாதுப் பொருள் அழிந்து விடும் என்று கூறுவதெல்லாம் திட்டத்தை தடுக்கின்ற முயற்சிகள் தான் என்று முதல்வர் குற்றம்சாற்றியுள்ளார்.