மாணவ‌ர்கள் கதர் துணி வாங்குங்கள்: கருணாநிதி வேண்டுகோள்!

Webdunia

செவ்வாய், 2 அக்டோபர் 2007 (13:58 IST)
கதர்த் துணிகளை மாணவ-மாணவிக‌ள் அதிக அளவில் வாங்கிப் பயன்படுத்திக் கதர்த் தொழிலாள‌ர்களு‌க்கு கைகொடுப்பீர் என முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

அண்ணல் காந்தியடிகளின் எண்ணப்படி தமிழகத்தில் உள்ள கிராமப்புற மக்களின் மேம்பாட்டினை மையமாகக் கொண்டு பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்து வதில் தமிழகம் மற்ற மாநிங்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்கிறது எ‌ன்று முத‌ல்வ‌‌ர் கருணா‌நி‌‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

அண்ணல் காந்தியடிகள் அறிமுகம் செய்த கதர்த் துணிகளின் உற்பத்தியையும், பயன்பாட்டினையும் அதிகரித்துக் கிராமப்புற மக்களின் வேலை வாய்ப்பினைப் பெருக்கி, அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்திடவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திடவும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் பெரிதும் பாடுபட்டு வருகிறது எ‌ன முத‌‌ல்வ‌ர் தெ‌ரி‌வி‌த்‌து‌ள்ளா‌ர்.

கதர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான கைவினைஞர்களின் வாழ்க்கைக்குத் துணை நிற்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து அனைத்துக் கதர்த் துணி ரகங்களுக்கும் ஆண்டு முழுவதும் வழங்கி வரும் 3 விழுக்காடு தள்ளுபடியினைப் பயன்படுத்திக் கதர்த் துணிகளை அதிக அளவில் வாங்கிப் பயன்படுத்திக் கதர்த் தொழிலாளர்க்குக் கைகொடுப்பீர் என மாணவ- மாணவியர், அரசு ஊழியர்கள், ஆலைத் தொழிலாளர்கள், பொதுமக்கள் அனைவரையும் அண்ணல் காந்தியடிகள் பிறந்த நன்னாளில் அன்புடன் வேண்டுகிறேன் எ‌ன்று முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்