முழு அடைப்பு நடத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் விதித்த தடையை தமிழக அரசு எந்தவிதத்திலும் மீறவில்லை என்று மத்திய அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி கூறியுள்ளார்!
தலைநகர் டெல்லியில் இன்று காலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தாஸ்முன்ஷி, தமிழக முதலமைச்சர் கருணாநிதியும், அம்மாநிலத்தின் மற்ற தலைவர்களும் உண்ணாவிரதத்தை கடைபிடிப்பதன் மூலம் காந்தியப் பாதையில்தான் போராடுகின்றனர் என்று கூறினார்.
தமிழக அரசிற்கு எந்தவிதத்திலும் நெருக்கடி தரமாட்டோம். அவர்கள் (தி.மு.க.) எங்களது அரசின் ஓர் அங்கம். தமிழக அரசை நேரடியாகவோ, மறைமாகவோ அல்லது எந்தவிதத்திலும் தொல்லை தரமாட்டோம். இதில் நாங்கள் உறுதியாகவுள்ளோம் என்று தாஸ் முன்ஷி கூறினார்.
தமிழக முதலமைச்சர் கருணாநிதி, தி.மு.க.வின் தலைவர் மட்டுமல்ல, இந்நாட்டின் முன்னணித் தலைவர்களில் ஒருவர். ஏழைகளில் மிக ஏழ்மையில் உள்ளவர்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும், பழங்குடியினருக்கும், சிறுபான்மையினருக்கும், சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள மக்களுக்காகவும் கவலைப்படுபவர். அவர்களுக்கு நல்லாதரவை அளிப்பதில் ஒரு உதாரணமாக உள்ளவர் என்று தாஸ் முன்ஷி கூறியுள்ளார்.
தமிழக அரசிற்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்து குறித்து இன்றைய அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை என்றும் தாஸ்முன்ஷி கூறினார்.