1ஆம் தேதி கடையடைப்பு, படப் பிடிப்பு ரத்து!

Webdunia

சனி, 29 செப்டம்பர் 2007 (11:30 IST)
வரும் 1ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்தப்படும் என்று வணிகர் சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன. அதே போல் சினிமா படப் பிடிப்பு ரத்து செய்யப்படுகிறது என்று பட அதிபர்கள் சங்க தலைவர் ராம நாராயணன் கூறியிருக்கிறார்.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் தமிழகம் தொழில், வணிகத் துறைகளில் முதல் இடத்தைப் பெறும். அரசியல் காரணங்களுக்காக சில கட்சிகளும் சில மதவாதிகளும் இந்த திட்டத்தை செயல்படாமல் முடக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளனர். இந்த திட்டம் தமிழகத்திற்கு மிகவும் தேவை. வணிகர்களுக்கு உகந்த திட்டம் என்பதால் வணிகர்களாகிய நாங்கள் இதை முழு மனதுடன் வரவேற்கிறோம் என்று தமிழக அனைத்து வணிகர்கள் சங்கத் தலைவர் சி.நவமணி, வணிகர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் மயிலை சி.பெரியசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. கூட்டணி கட்சியினர் எடுத்த முடிவின்படி சேது சமுத்திர திட்டத்தை விரைவாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி 1ஆம் தேதி நடைபெறும் முழு கடையடைப்பில் வணிகர்களாகிய நாங்களும் கலந்து கொள்வோம். அன்றைய தினம் தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும். இந்த முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற அனைத்து வியாபாரிகளும் உறுதுணையாக இருப்பார்கள் என அவர்கள் கூறியுள்ளனர்.

இதேபோல் தமிழக அனைத்து வணிகர் சங்கத்தின் மாநில தலைவரும், வணிகர் நல வாரிய உறுப்பினருமான ஆ.தனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 1ஆம் தேதி நடக்கும் முழு அடைப்பை முழுமையாக வெற்றி பெறச் செய்ய வணிகர் சமுதாயம் தங்கள் முழு ஒத்துழைப்பை அளிப்போம் என உறுதி ஏற்கிறோம். அந்த நாளில் அனைத்துக் கடைகளையும் மூடி முழு அடைப்பை வெற்றி பெறச் செய்ய வணிகர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ராம நாராயணன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தமிழர்களின் 100 வருடங்களுக்கு மேலான கனவுதான் சேது சமுத்திர திட்டம். இந்த திட்டத்தினால் கடல் வாணிபம் ஏற்றம் பெற்று கரையோர மாவட்டங்கள் மட்டுமல்ல, மற்ற பிரிவினரும் செழிப்படைவார்கள். ஆகவே இந்த திட்டம் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் நலம் பயக்கும் திட்டம் ஆகும் என்று கூறியுள்ளார்.

சேது சமுத்திர திட்டம் வருங்கால இந்தியாவை வளமாக்கும். தமிழகத்தின் வாணிபம் மேம்படும். எதிர்கால சந்ததியினரையும் மனதில் கொண்டு, அதை நிறைவேற்ற அக்டோபர் 1ஆம் தேதி முழு அடைப்பு நடைபெற உள்ளது. இந்த முழு அடைப்பில், திரையுலகமும் பங்கெடுத்துக் கொள்கிறது. அக்டோபர் 1-ந் தேதி படப்பிடிப்பு மற்றும் அது சம்பந்தப்பட்ட வேலைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகமெங்கும் நடைபெறாது. அனைத்து திரைத்துறை பிரிவும் இந்த முழு அடைப்பில் கலந்துகொண்டு சேது சமுத்திர திட்டம் நிறைவேற ஆதரவு தருவோம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்