தலைமலை அடர்ந்த காட்டிற்குள் யானை விரட்டியடிப்பு

Webdunia

சனி, 29 செப்டம்பர் 2007 (10:28 IST)
பண்ணாரி அருகே சாலையில் நின்றுகொண்டு கரும்பு லாரிகளை மறித்து ரகளை செய்து வந்த காட்டுயானையை தலைமலை அடர்ந்த வனப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து உள்ள பண்ணாரி வனப்பகுதியில் இருந்து ஒரு காட்டுயானை நாள்தோறும் சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டு இந்த வழியாக வரும் கரும்பலாரிகளை தடுத்து ரகளை செய்து வந்தது. மேலும் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களையும் மிரட்டி வந்தது. இந்த யானையை வனத்துறையினர் காட்டிற்குள் விரட்டியடித்தால் மீண்டும் இது சாலைக்கே வந்துகொண்டிருந்தது.

இந்த நிலையில் இந்த காட்டுயானையை விரட்ட சத்தியமங்கலம் மாவட்ட வஅதிகாரி ராமசுப்பிரமணியம் தலைமையில் வனவர்கள் சுந்தர்ராஜன், மோகன் உள்ளிட்டோர் குழு நேற்று இரவு சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரிருக்கு சென்றனர்.

அங்கு திம்பம் சாலையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவின் ஓரத்தில் கரும்பு லாரியை எதிர்நோக்கி காட்டுயானை காத்திருந்தது. உடனே வனத்துறையினர் மேல் இருந்து வரும் வாகனங்களை ஆசனூர் சோதனை சாவடியில் நிறுத்தினார்கள்.

கீழே இருந்து திம்பம் பகுதிக்கு செல்லும் வாகனங்களை பண்ணாரி சோதனை சாவடியில் நிறுத்தினார்கள். ஒரு கரும்பு லாரியை மட்டும் வரவழைத்து அதில் இருந்து ஒரு கட்டு கரும்பை எடுத்து நின்று கொண்டிருந்த யானைக்கு வீசினார்கள்.

லாரி திம்பம் மலைப்பாதையை நோக்கி நிறுத்தப்பட்டது. உடனே காட்டுயானை கரும்பை ருசிபார்த்தது மீண்டும் கரும்புக்காக லாரியை தொடர்ந்தது. இதுதான் சமயம் என லாரி மெதுவாக கொண்டஊசி வளைவில் திம்பம் மலைப்பாதையை நோக்கி நகர்த்தப்பட்டது.

ருசிகண்ட காட்டுயானை விடாமல் கரும்பலாரியை துரத்தியது. யானையின் பின் வனப்படையினர் சென்றனர். இருபத்தி ஏழு கொண்டை ஊசி வளைவுகளை இப்படியே கரும்பு ஆசைகாட்டி காட்டயானையை கடக்க வைத்தனர்.
பின் போக்குவரத்தே இல்லாமல் இருக்கும் தலைமலை வனப்பகுதிக்கு லாரியை திரும்பி திம்பம் பகுதியில் இருந்து சுமார் 30 கி.மீ. துரம் அடர்ந்த வனப்பகுதி பாதையில் சென்றனர். தன்னை காட்டுக்குள் விரட்டப்போகிறார்கள் என தெரியாத காட்டுயானை எப்படியும் கரும்பை பிடித்துவிடவேண்டும் என வேகமாக நடந்து லாரியை தொட்டது.

பின் லாரியில் இருந்து ஒரு கட்டு கரும்பு எடுத்து போடப்பட்டது. இதை திண்றபிறகு மீண்டும் லாரியை துரத்த லாரி தலைமலை வனப்பகுதியை நோக்கி நகர தொடங்கியது.

பின்தொடர்ந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றபின் வனத்துறையினர் காட்டிற்குள் விரட்டியடித்தனர். இந்த சம்பவம் சினிமாவில் வருவதுபோல் இருந்ததால் இந்த வழியாக பயணம் செய்த மக்கள் நின்று வேடிக்கை பார்த்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்