மாவட்ட கல்வி அதிகாரிக்கு ரூ. 20,000 அபராதம்

Webdunia

சனி, 29 செப்டம்பர் 2007 (10:22 IST)
நாமக்கல்லில் தகவல் தர மறுத்த மாவட்ட கல்வி அதிகாரிக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டது.

இது குறித்து பயனீட்டாளர் சங்க செயலாளர் சுப்பராயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியரிடம் முறைகேடாக வசூலித்து பல லட்சம் ரூபாய் ஊழல் செய்ததாக பள்ளி தலைமை ஆசிரியை மீது புகார் எழுந்தது. இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி பெரியசாமி விசாரணை நடத்தி தலைமை ஆசிரியரை கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து தலைமை ஆசிரியர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடையாணை பெற்று அதே பள்ளியில் தொடர்ந்து தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

தற்போது முதன்மை கல்வி அதிகாரி ஊழல் குறித்து விசாரணை துவக்கியுள்ளார். இந்நிலையில், பயனீட்டாளர் சங்கம் பள்ளியை குறித்து சில தகவல் பெற மாவட்ட கல்வி அலுவலர் பெரியசாமியிடம் மனு கொடுத்தனர். அவர் மனுவை தலைமஆசிரியைக்கு அனுப்பினார். அதில் சில தகவல்களுக்கு மட்டும் பதிலளித்து விட்டு மற்றதுக்கு தகவல் தரமுடியாது என திருப்பி அனுப்பினார். மாவட்ட கல்வி அலுவலர் அதை அப்படியே மனு தாரருக்கு அனுப்பி விட்டார். தகவல் அறியும் உரிமை சட்டப்படி மனுதாரருக்கு தகவல் தர வேண்டும்.

இது குறித்து மாநில தகவல் ஆணையத்தில் மனுதாரர் மேல் முறையீடு செய்தார். அவர்கள் விசாரணை நடத்தி தகவல் கொடுக்க மறுத்ததற்காகவும் விசாரணைக்கு ஆஜராகாத நாமக்கல் மாவட்ட கல்வி அதிகாரி பெரியசாமி சொந்த பணத்தில் ரூ.20 ஆயிரம் கருவூலத்தில் செலுத்த வேண்டும். மேலும், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வித்துறை இயக்குநருக்கு உத்தரவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்