''சமுதாயத்தில் அரவானிகள் புறக்கணிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று'' என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.
இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் (ஃபிக்கி) மகளிர் பிரிவு சார்பில் சென்னையில் "அரவானிகளை சேர்த்துக்கொள்வதா, தவிர்ப்பதா' என்ற கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில் தலைமை வகித்த கனிமொழி பேசுகையில், அரவானிகள் பொதுவாக சமுதாயத்தில் மதிக்கப்படுவதில்லை. ஊனமுற்றோருக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்புகள், முன்னுரிமைகள் கூட அரவானிகளுக்கு அளிக்கப்படுவதில்லை என்று கூறினார்.
மருத்துவராகவோ, என்ஜினீயராகவோ ஆவதற்கு சாதாரண குழந்தைகளுக்கு எந்த அளவு உரிமை உள்ளதோ, அதே அளவு உரிமை அரவானி குழந்தைகளுக்கும் உள்ளது. ஆனால் பெற்றோரே இதுபோன்ற குழந்தைகளை ஏற்றுக்கொள்வதில்லை. பள்ளிகளிலும் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர் என வருத்தத்துடன் கனிமொழி தெரிவித்தார்.
கல்வி நிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும் இந்த நிலையை மாற்ற முயற்சி எடுக்கவேண்டும். அரவானி குழந்தைக்கு உரிய எளிய வாழ்க்கை கிடைக்க வழி வகுக்க வேண்டும். இதற்கு மக்களிடையே விழிப்புணர்வு தேவை. அரவானிகளின் நிலை மாற தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் இவர்களுக்கான மாற்று அறுவை சிகிச்சை வெளிப்படையாக செய்யப்படுகின்றன. மேலும் உயர் கல்வியில் இவர்கள் முழு அளவில் பங்கு பெறுவதற்கான முயற்சியும் எடுக்கப்பட்டு வருகிறது என்றார் கனிமொழி.