திருச்சிக்கு வந்த முதல்வர் கருணாநிதி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, 1ஆம் தேதி நடக்கும் முழு அடைப்பு பற்றி உச்ச நீதி மன்றம் சில கருத்துக்கள் கூறி உள்ளதோ? என்று கேட்டதற்கு, 1ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் என்பது தி.மு.க. உள்பட சில தோழமை கட்சிகள் தமிழ் மக்களுக்காக ஒரு கோரிக்கையை முன்வைத்து கவனத்தை கவரும் வகையில் அமைதியான முறையில் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்து உள்ளன. அது அரசு அறிவிப்பு அல்ல என்றார்.
தி.மு.க. அரசை கலைக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் பா.ஜ.க.வின்ர் வலியுறுத்தி உள்ளார்களே? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று அவர்கள் மனசாட்சிக்கு தெரியும். அவர்களுடைய கட்சி அலுவலகத்தில் கல்வீச்சியாளர்கள் கூட 10 பேர் உடனே கைது செய்யப்பட்டு உள்ளனர். குஜராத் மாநிலத்தில் ஆட்சி நடத்துகிற அகிம்சா மூர்த்திகள் கட்சியை சேர்ந்தவர்கள் தி.மு.க. ஆட்சியை கலைக்க கோரி குடியரசு தலைவரிடம் வற்புறுத்துவது முரண்பாடான ஒன்றாகும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு திட்டத்தை நிறைவேற்ற என்ன முயற்சி எடுத்து வருகிறீர்கள்? என்று முதல்வரிடம் கேட்டபோது, டெல்லி செல்லும் போதெல்லாம் இதுகுறித்து அடிக்கடி ஞாபகப்படுத்தி பேசி வருகிறேன். நீங்கள் விடுத்த இந்த கேள்வியின் மூலமும் 33 சதவீத இடஒதுக்கீடு கொள்கை மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பயன்படும் என்று நம்புகிறேன் என்றார்.
அரசு கேபிள் டி.வி. எப்போது தொடங்கப்படும் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, தமிழ்ப் புத்தாண்டு முதல் என்று முதல்வர் தெரிவித்தார்.
பள்ளி, கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதே? என்று முதல்வரிடம் கேட்டதற்கு, செல்போனால் கல்வி வளர்ச்சி கெடுதல் என்றும் வேறு விவகாரங்களால் இடையூறு ஏற்படுகிறது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. அது பரிசீலிக்கப்படுகிறது என்று கூறினார்.
அணு சக்தி ஒப்பந்தம் குறித்து முதல்வர் கருணாநிதியிடம் கேட்டபோது, அணு சக்தி ஒப்பந்தம் குறித்து ஒரு அணு கூட கூற முடியாது. அதுபற்றி விவாதிப்பதற்கு ஏற்ற இடம் இதுவல்ல. அதற்கான நேரமும் இதுவல்ல என்று பதிலளித்தார்.