காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று மாலைக்குள் அணை நிரம்பி விடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டில் 6-வது முறையாக நிரம்பி மேட்டூர் அணை சாதனை படைக்க உள்ளது.
கர்நாடகம் மற்றும் கேரளாவில் கடந்த சில நாட்களாக மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணைகள் நிரம்பி உள்ளதால் அணைகளுக்கு வரும் உபரி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வருவதால் நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கியது.
இன்று காலை அணைக்கு வினாடிக்கு 44 ஆயிரத்து 489 கனஅடி நீர் வந்து கொண்டு இருந்தது. நீர்மட்டம் 119.58 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இன்று மதியம் அணை நிரம்பி விடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டில் 6-வது முறையாக நிரம்பி சாதனை படைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.