ஜனநாயக ரீதியில் நடைபெறும் பொது வேலைநிறுத்தம் காரணமாக வரும் 1ஆம் தேதி ஆட்டோக்கள் ஓடாது என ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
சேதுசமுத்திர திட்டத்தை விரைவாக நிறைவேற்ற கோரி மத்திய அரசை வலியுறுத்தி, தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வருகிற 1ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏ.ஐ.டி.யூ.சி ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுசெயலாளர் சேஷசயனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத வெறி சக்திகளின் சதியின் காரணமாக தமிழகத்தில் பல ஆண்டுகாலமாக போராடி பெற்ற சேதுசமுத்திர திட்டத்தை தடுக்க நினைப்பவர்களுக்கு எதிராக தமிழகத்தில் அனைத்து முற்போக்கு சக்திகளின் ஆதரவோடு வரும் 1 ஆம் தேதி தமிழகத்தில் பொருளாதார, மேம்பாடு காண தேச பக்த உணர்வுடன் தமிழக நலன் காக்க ஜனநாயக ரீதியான முறையில் நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ஏ.ஐ.டி.யூ.சி. சங்கத்தை சேர்ந்த ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்று தமிழக அரசின் முயற்சிக்கு துணை நிற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.