சத்தியமங்கலம் அடுத்து பண்ணாரியில் இருந்து திம்பம் மலைப்பாதை செல்லும் ரோட்டில் கரும்பு லாரிகளை எதிர்பார்த்து நிற்கும் காட்டு யானை ஒரு வேனை விரட்டுகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கரும்பு லாரிகளை விரட்டிய காட்டு யானையை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டி விரட்டி அடித்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரி. இங்கிருந்து தாளவாடி செல்லும் வரையிலும் ரோட்டின் இருபுறமும் வனப்பகுதியால் சூழ்ந்த இடமாகும்.
இந்த வனப்பகுதியில் காட்டுயானைகள், காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி மற்றும் மான் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகமாக வாழ்ந்து வருகிறது. இந்த வனவிலங்குகள் வனப்பகுதிக்குள் இருக்கும் உணவுகளை உட்கொண்டு விட்டு காட்டுக்குள் இருக்கும் குளம், குட்டைகளில் இருக்கும் தண்ணீரை குடித்துவிட்டு வாழ்ந்து வருகிறது.
பருவமழை இல்லாமல் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது இந்த வனவிலங்குகளில் காட்டுயானை மற்றும் மான் கூட்டங்கள் வன ஓரத்தில் இருக்கும் கிராமங்களுக்கு படையெடுப்பது வழக்கம். ஆனால் கடந்த சில மாதங்களாக சத்தியமங்கலம் வனப்பகுதியில் அவ்வப்போது மழை பொழிவதால் வனவிலங்குகளின் தண்ணீர் பிரச்சனை முற்றுப்பெற்றுள்ளது.
ஆகவே தற்போது ரோட்டின் ஓரத்தில் வனவிலங்குகளை பார்ப்பது அரிதாக உள்ளது.
இந்த நிலையில் பண்ணாரியில் இருந்து திம்பம் செல்லும் வழியில் ஒரு பெண் யானை ரோட்டின் ஓரம் நின்று கொண்டு இந்த வழியாக வரும் கரும்பு லாரிகளை மறித்து கரும்பு எடுக்கும் நிகழ்வால் இவ்வழியே வாகனத்தில் செல்லும் நபர்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்த யானை மூன்றவாது கொண்டை ஊசி வளைவில் இருந்து பண்ணாரி வரை ரோட்டில் ஏதாவது ஒரு இடத்தில் கரும்பு லாரிகளுக்காக காத்திருக்கிறது.
கரும்பு லாரி வரும் வரையிலும் அவ்வழியே செல்லும் வாகனங்களை துரத்துவது இதன் பொழுதுபோக்காக இருந்த வருகிறது. இதேபோல் திம்பம் அடுத்து அரேபாளையம் பிரிவில் இருந்து ஒரு ஆண் யானை இருபத்தி ஐந்தாம் கொண்டை ஊசி வளைவு வரை கரும்பு லாரியை விரட்டி வரும் சம்பவம் இப்பகுதியில் வசிக்கும் மக்களை பதற வைத்துள்ளது.
தற்போது மண்டல வனபாதுகாவலர் துரைராசு உத்தரவின்பேரில் சத்தியமங்கலம் மாவட்ட வன அதிகாரி ராமசுப்பிரமணியம் மேற்பார்வையில் சத்தியமங்கலம் ரேஞ்சர் சுந்தரராஜன் தலைமையிலான வனக்குழுவினர் நாள் தோறும் மாலை நேரத்தில் கரும்புக்காக வெளியே வரும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்து வருகின்றனர்.
வனத்துறையினருக்கு பயந்து செல்லும் யானை வனப்பகுதியில் பத்து அடிக்கு உட்புறம் நின்றுகொண்டு அவ்வப்போது பிளிரி வனத்துறையினரையே மிரட்டியும் வருகிறது.