முழு அடைப்பை எதிர்த்து அதிமுக வழக்கு

Webdunia

வியாழன், 27 செப்டம்பர் 2007 (11:13 IST)
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, தி.மு.க. மற்றும் அதன் தோழமைக் கட்சிகளும் அக்டோபர் 1ஆம் தேதி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருப்பதை சட்ட விரோதம் என்று அறிவிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்திலஅ.தி.மு.க வழக்கு தாக்கல் செய்தது.

அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன், சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது. முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ள அக்டோபர் 1 ந் தேதி திங்கட் கிழமையாகும். அதற்கு முன்னர் வரும் சனிக்கிழமையும், ஞாயிற்றுக் கிழமையும் விடுமுறை நாட்களாகும். முழு அடைப்பிற்கு அடுத்த நாள் அக்டோபர் 2 ந் தேதி, செவ்வாய்க் கிழமை, காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தேசிய விடுமுறை நாளாகும்.

இந்நிலையில் பொது மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தி.மு.கவும், அதன் தோழமைக் கட்சிகளும் முடிவு செய்துள்ளன. இது அரசியல் சட்டத்தின் 144-வது பிரிவை மீறும் செயலாகும்.

முழு அடைப்பு நடத்தப்படும் அன்று பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்து சேவைகள் இருக்காது. இதனால் பொது மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

இதே போல் கேரள மாநிலத்தில் 1987 ஆம் ஆணடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்தது. அதை சட்ட விரோதம் என்று கேரள உயர்நீதி் மன்றம் அறிவிததது. இதை எதிர்த்து இந்திய கம்யூனி்ஸ்ட் கட்சி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முழு அடைப்பு நடத்துவதால் மக்களின் உரிமை மறுக்கப்படுகிறது என்று கூறிய உச்ச நீதிமன்றம், இதனால் மக்களுக்கு ஏற்படு்ம் இழப்பை, முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கும் அமைப்புகளே ஈடு செய்ய வேண்டும் என்றும் கூறியது.

மகாரஷ்டிரா மாநிலத்தில் நடந்த ஒரு வழக்கில், பந்த் நடத்த அழைப்பு விடுத்த சிவசேனை கட்சிக்கு மும்பை உயர் நீதிமன்றம் ரூ.25 இலட்சம் அபராதம் விதித்தது, இந்த தீர்ப்பை ரத்து செய்ய உச்ச நீதிமன்றமும் மறுத்து விட்டது.

உச்ச நீதிமன்றத்தின், இந்த தீர்ப்பை தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், டி.ஜி.பி யும், தி.மு.க மற்றும் அதன் தோழமைக் கட்சிகளுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும்.

முழு அடைப்பு நடந்தால் ஏற்படப் போகும் இழப்புக்காக ரூ. 100 கோடியை அரசிடம் டெபாசிட் செய்யுமாறு தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு நீதி மன்றம் உத்தரவிட வேண்டும்.

அக்டோபர் 1 ந் தேதி முழு அடைப்பு நடத்த விடுத்துள்ள அழைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்று அறிவிக்க வேண்டும் என்று மனுவில் மதுசூதனன் கோரியுள்ளார்.

தி.மு.க தலைவர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமி, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் என். வரதராஜன், இநதிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஆகியோருக்கு எதிராக, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு வியாழக்கிழமை ( இன்று ) விசாரணைக்கு வருகிறது.
இதே போன்ற மனுவை சமூக சேவகர் டிராபிக் ராமசாமி என்பவரும் தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் முழு அடைப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டாம் என்று மாநில அரசை, ஆளுநர் பர்னாலா கட்டுப்படுத்த வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்