வேதாந்தி சாமியார் மீது வழக்குப் பதிவு!

Webdunia

செவ்வாய், 25 செப்டம்பர் 2007 (17:53 IST)
தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் தலையையும், நாக்கையும் வெட்டிக் கொண்டு வருபவருக்கு அவருடைய எடைக்குக் எடை தங்கம் தரப்படும் என்று பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மக்களவை முன்னாள் உறுப்பினர் ராம் விலாஸ் வேதாந்தி சாமியார் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது!

சென்னையைச் சேர்ந்த தனஞ்செழியன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் வேதாந்தி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பல்வேறு சமூகங்களுக்கு இடையே பகைமையை உருவாக்குதல், சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படுதல், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் அறிக்கை வெளியிடுதல் ஆகிய குற்றங்களின் அடிப்படையில் வேதாந்தி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவி்த்துள்ளது.

இதற்கிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை பா.ஜ.க., இந்து முன்னணி அலுவலகங்கள் மீது நடந்த தாக்குதல்கள் தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்