வேதாந்தியை கைது செய்யும் வரை ஆர்ப்பாட்டம் : துணை சபாநாயகர்

Webdunia

செவ்வாய், 25 செப்டம்பர் 2007 (13:10 IST)
பா.ஜ.க.வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேதாந்தியை மத்திய அரசு கைது செய்யும் வரை தி.மு.க.வினரின் ஆர்ப்பாட்டம் தொடரும் என துணை சபாநாயகர் கூறினார்.

இது குறித்து நாமக்கல்லில் துணை சபாநாயகர் துரைசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியது, தமிழக முதல்வர் கருணாநிதி குறித்து ராம் விலாஸ் வேதாந்தி கூறிய வார்த்தைகள் தி.மு.க., தொண்டர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவருடைய கருத்துக்கு பதில் அளிப்பதை விட்டுவிட்டு மதவாத அமைப்பை சேர்ந்த வேதாந்தி, முதல்வரின் தலையையும், நாக்கையும் வெட்டி வருபவருக்கு எடைக்கு எடை தங்கம் தருவதாக கூறியுள்ளது அவர்களுடைய மதவெறியை எடுத்துக்காட்டுகிறது.

தமிழக முதல்வரை இப்படி பேசிய வேதாந்தி சாமியார் மீது மத்திய அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி.மு.க.வினர் தங்கள் எதிர்ப்பை காட்டத்தான் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இதுபோன்ற அமைப்பு மற்றும் கட்சிகளை ஆதரிப்பது நாட்டிற்கே ஆபத்து. தற்போது வேதாந்தி அப்படி கூறவில்லை என்கிறார்.

தொண்டர்களுக்கு உத்தரவிட்டு மறுநாள் மறுப்பது வேடிக்கையாக உள்ளது. அவரை மத்திய அரசு கைது செய்ய தவறினால் ஆர்ப்பாட்டம் தொடரும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்