இந்து விரோதப் போக்கை கடைபிடித்து வரும் தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என பிணையில் வெளிவந்த பா.ஜ.க.மாநில பொதுச்செயலாளர் கணக்காளர் ரமேஷ் கூறினார்.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதில் மோதல் ஏற்பட்டது. இது காரணமாக 115 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல்துறையினர் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கணக்காளர் ரமேசை இரு பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நேற்று ஆத்தூர் நீதிமன்றத்தில் 58 பேருக்கு பிணைய விடுதலை வழங்கப்பட்டது. அதில் கணக்காளர் ரமேஷ் உள்பட ஆறு பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலையான கணக்காளர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தம்மம்பட்டியில் முஸ்லிம்கள் விநாயகர் சதுர்த்தியை நடத்த விடக்கூடாது என்ற நோக்கத்தில், காவல்நிலையம் முன் சாலை மறியல் மற்றும் சாலையில் தொழுகை நடத்தியது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இந்து பண்டிகையை தடுத்த அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அப்பாவி பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்து வழக்கு தொடுத்துள்ளனர்.
தனி மனித வழிபாட்டு உரிமையை தடை செய்யும் தமிழக அரசின் போக்கை கண்டித்தும், இந்து விரோதப் போக்கை கடைபிடித்து வரும் தி.மு.க. அரசை எதிர்த்தும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.