ராமர் பற்றி கருத்து தெரிவித்த முதலமைச்சர் கருணாநிதியின் தலையை துண்டித்து நாக்கை அறுத்தால் தங்கம் பரிசு என்று பாஜக முன்னாள் எம்.பி. வேதாந்தி அறிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க. தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் வேதாந்தி உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் இன்று காலை தியாகராய நகரில் உள்ள மாநில பாரதிய ஜனதா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தி.மு.க. அறிவித்து இருந்தது. இதையொட்டி அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். பா.ஜ.க அலுவலகம் அமைந்துள்ள வைத்தியராமன் தெருவின் இருபக்கமும் காவல்துறையினர் தடுப்பு கம்பிகளை அமைத்து யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
காலை 10 மணிக்கு தென் சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமையில் ஏராளமான தி.மு.க.வினர் போக்ரோட்டில் குவிந்தனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அங்கேயே கோஷங்கள் எழுப்பி வேதாந்தியின் உருவ பொம்மையை எரித்தனர்.
இதனிடையே, காவல்துறையினரின் தடுப்பை மீறி ஏராளமான திமுகவினர் பாஜக அலுவலகத்தை நோக்கி ஓடினார்கள். அங்கு சரமாரியாக கற்கள் வீசி தாக்கினர். இதில், ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. அலுவலகத்தில் நிர்வாகிகள் குமாரவேல், தமிழிசை சுந்தர ராஜன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் உள்ளே இருந்தனர். கல்வீச்சில் தமிழிசை சவுந்தர்ராஜன் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
அலுவலகத்தின் முன்பு வேதாந்தி உருவ பொம்மையை எரித்தனர். அங்கிருந்த இரு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கினர். அலுவலக பொருட்களை சூறையாடினர். அவர்களை காவல்துறையினர் விரட்டினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் பரிதி இளம்வழுதி, மேயர் மா.சுப்பிரமணியன், ரகுமான் கான், முன்னாள் அமைச்சர் புலவர் இந்திரகுமாரி உள்பட ஏராளமானோரை காவல்துறையினர் ஜீப்பில் அழைத்து சென்றனர்.