ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளில் உள்ள ஓடைகளில் ஓடும் தண்ணீர் முழுவதுமாக கர்நாடக அணைகளில் கலக்கிறது. இந்த தண்ணீரை தடுப்பணைகள் மூலம் தேக்கினால் தமிழக விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ளது திம்பம் மலைப்பகுதி. இது கடல் மட்டத்திற்கு மேல் 1105 மீட்டர் உயரமுள்ளதாகும். இந்த மலைப்பகுதிகளை சுற்றி ஆசனூர், கேர்மாளம், தலைமலை, தாளவாடி, கடம்பூர் என ஆயிரக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் அனைவரும் விவசாயத்தை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
இப்பகுதியிலுள்ள சுமார் 4 ஆயிரம் சதுர கி.மீ. வனப்பகுதியில்தான் சந்தனக்கடத்தல் வீரப்பன் தனி ராஜ்ஜியம் நடத்தி வந்தான். திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகள் முடிந்தவுடன் ஆசனூர் வருகிறது. இதிலிருந்து மேற்கே பத்து கி.மீ. தூரம் சென்றால் புளிஞ்சூர். இது கர்நாடகா மாநிலம் ஆகும். அதேபோல் வடக்கு சென்றால் உடையார்பாளையாம். இதுவும் கர்நாடகா பகுதியாகும். ஆகவே இந்த வனப்பகுதி தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலத்தின் எல்லைப்பகுதியாக விளங்கி வருகிறது.
திம்பம் வனப்பகுதி மிகவும் அடர்ந்த பகுதியாகும். இந்த வனப்பகுதியில் பல்வேறு சிறிய அருவிகள் மற்றும் பல்வேறு ஓடைகள் உள்ளன. ஆண்டில் பெரும்பாலும் அதாவது ஒன்பது மாதங்கள் இந்த ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். சாலையில் செல்லும்போதே வனப்பகுதிக்குள் தண்ணீர் ஓடும் சத்தம் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். இந்த வனஓடைகள் முழுவதும் தமிழ்நாட்டிற்கு சொந்தமான இடங்களில் ஓடிக்கொண்டிருந்தாலும் இது கலக்கும் இடம் கர்நாடகா மாநிலத்திற்க்கு சொந்தமான அணைகள் என்பதுதான் வேதனையான விஷயம்.
தமிழ்நாட்டின் எல்லைப்பகுதியான தாளவாடியில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் கர்நாடகா மாநிலத்திற்கு சொந்தமான சிக்கள்ளா என்ற அணை உள்ளது. தாளவாடியில் இருந்து ஆறுபோல் ஓடும் ஒரு பெரிய வன ஓடையில் எப்போதும் வினாடிக்கு சுமார் 600 கனஅடி தண்ணீர் சென்றுகொண்டே இருக்கும். இந்த ஓடை சிக்கள்ளா அணையில்தான் சென்று கலக்கிறது. ஆனால் தாளவாடி பகுதி விவசாயிகள் தங்கள் கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் விவசாய பயிர்களை கருகுவதை கண்டு கண்ணீர் வடிக்கின்றனர்.
தாளவாடியில் ஒரு தடுப்பணை கட்டி இந்த தண்ணீரை தேக்கினால் இப்பகுதியில் உள்ள சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பயனடையும். இதேபோல் ஆசனூர் பகுதியிலிருந்து வரும் மெகா வன ஓடை கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சொர்ணவதி அணையில் கலக்கிறது.
நம்மிடம் இருக்கும் தண்ணீரை சரியாக பயன்படுத்த இயலாமல் வீணாக்கிவரும் இந்த நிலையில் சரிவர மழை பெய்யாமல் மேட்டூர் அணை வறண்டு காணப்படும் சமயத்தில் கர்நாடகா மாநிலத்திடம் தண்ணீருக்காக கைகட்டி கெஞ்சும் நிலை உள்ளது. கர்நாடகா அரசோ தங்கள் அணைகளில் இருந்து வெளியேரும் உபரி தண்ணீரைகூட அடுத்த இடத்தில் தடுப்பணை கட்டி தடுத்து முடியாத சமயத்தில் மட்டுமே அந்த தண்ணீரை காவிரியில் விடுகின்றனர்.
நம் தண்ணீரை அவர்களுக்கு கொடுத்துவிட்டு அவர்களிடம் தண்ணீர் கேட்கும் போராட்டம் நடக்கும் நிலைக்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றால் இதுபோன்று வீணாக செல்லும் தண்ணீரை தடுப்பணை கட்டி தடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.