கொடைக்கானல், திருச்செந்தூரில் நாளை அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு!
Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2007 (18:08 IST)
கொடைக்கானல் நகராட்சிப் பகுதியில் முறையாக குடிநீர் விநியோகிக்க கோரியும், திருச்செந்தூர் மற்றும் உடன்குடி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 79 கிராம மக்களுக்கு தினந்தோறும் குடிநீர் வழங்கக் கோரியும் நாளை போராட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஒன்றியம் மற்றும் நகரப் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடங்களில் பல ஆண்டு காலமாக குடியிருந்து வரும் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட வேண்டும் என்று கடந்த ஆட்சியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதன் அடிப்படையில் முதல் கட்டகமாக 1500 வீடுகளுக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த பின் இதுவரை வீட்டு மனைப் பட்டா வழங்கப்படவில்லை என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதேபோல் கொடைக்கானல் நகராட்சிப் பகுதியில் முறையாக குடிநீர் விநியோகிக்க தவறிய தி.மு.க. நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரியும் நாளை (21ஆம் தேதி) காலை 10 மணிக்கு கொடைக்கானல் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் மற்றும் உடன்குடி ஒன்றியங்களை சேர்ந்த 14 கிராம ஊராட்சிகளுக்கு உட்பட்ட 79 கிராம மக்களுக்கு எல்லப்பன்நாயக்கன் குளத்தில் இருந்து தினந்தோறும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த குளத்திற்கு தண்ணீர் திறந்து விடாததால் வறண்டு போய் உள்ளது. இதனால் குடிநீருக்காக மக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இத்தகைய அவல நிலையை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், எல்லப்பநாயக்கன் குளத்திற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விடக் கோரியும் நாளை (21ஆம் தேதி) திருச்செந்தூர் வ.உ.சி. திடலில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.