அணு ஒப்பந்தமும், ராமர்பாலமும் அரசியல் மாற்றத்தைக் கொண்டுவரும் : அத்வானி!
Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2007 (17:16 IST)
அணு சக்தி ஒப்பந்தமும், ராமர் பாலமும் நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகான அரசியலில் மற்றொரு திருப்பத்தைக் கொண்டுவரப் போகின்றன பா.ஜ.க.வின் மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
"ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குள் உள்நாட்டு யுத்தம் தொடங்கிவிட்டது. அடுத்ததாகத் தன் வலிமையை நிரூபிக்க பாஜக தயாராகி வருகிறது. எனது அனுபவத்தில் இரு முக்கியமான நிகழ்வுகளைக் கூறுவேன், ஒன்று குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றபோது, இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் இந்திராகாந்தியை 6 ஆண்டுகளுக்குத் தகுதியிழக்கச் செய்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிகழ்வு நாட்டின் அரசியலையே மாற்றியமைத்தது. தொடர்ந்து நாம் அவசரநிலையைச் சந்தித்தோம், ஜனநாயகம் கட்டுக்குலையும் சூழல் உருவானது" என்று கூறிய அத்வானி, அதேபோல இப்போது அணு சக்தி ஒப்பந்தமும், ராமர் பாலமும் நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகான அரசியலில் மற்றொரு திருப்பத்தைக் கொண்டுவரப் போகின்றன என்று விவரித்தார்.
இப்போது அணு சக்தி ஒப்பந்த விவாகாரத்தில் காங்கிரசிற்கும் இடதுசாரிகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு, "இது ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணி" என்ற பாஜகவின் பார்வையை உறுதி செய்வதாக உள்ளது.
"இந்த இரு சிக்கல்களும் ஐக்கியமுற்போக்குக் கூட்டணி சந்தர்ப்பவசமானது என்று நிரூபிப்பதுடன் அதன் நிலைத்தன்மையைப் பற்றி புதிய கேள்வியை எழுப்பியுள்ளன"
ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் இடதுசாரிகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கூட்டணி பொதுக் கருத்தினால் உருவானதல்ல, பாஜகவிற்கு எதிரான நிலைப்பாடு மட்டுமே அவர்களை ஒன்றிணைத்துள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடதுசாரிகள் மட்டுமே மிகப்பெரிய நிலையற்ற சக்தியாக உள்ளனர். இப்போது கூட்டணியில் உருவாகியுள்ள இரண்டாவது நிலையற்ற சக்தி என்று திமுக நிரூபித்து வருகிறது என்று அத்வானி கூறினார்.