தமிழகத்தில் சுற்றுலா முகவர்கள் மாநாடு!
Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2007 (18:02 IST)
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கத்துடன் வருகிற அக்டோபர் 5 முதல் 8 ஆம் தேதி வரை இந்தியச் சுற்றுலா முகவர்கள் கூட்டமைப்பின் மாநாட்டினை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்துகிறது.
கொல்கத்தாவில் இன்று இத்தகவலை வெளியிட்ட தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாளர் முனைவர் எம். இராஜாராம், உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முறைகள் பற்றி விவாதிக்க இந்த மூன்று நாள் மாநாடு உதவும் என்றார்.
தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருகிறது என்று கூறிய இராசாராம், கடந்த ஆண்டைவிட கூடுதலாக 21 விழுக்காடு பயணிகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர் என்றார்.
சென்னை, வேலூர், மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகள் உருவாகி வருகின்றன. இவை மற்ற அதிநவீன மருத்துவ மையங்களுடன் இணைந்து செயல்படுவதால், மாநிலத்தில் மருத்துவச் சுற்றுலா மிகப்பெரிய அளவில் வளர உதவுகின்றன. மத்தியச் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சுற்றுலா மேம்பாடு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஆகியவற்றில் நாட்டிலேயே முன்னணி மாநிலமாகத் தமிழகம் உருவாகி வருகிறது. கிழக்கிந்தியாவில் குறிப்பாகக் கொல்கத்தாவில் இருந்து தமிழகத்திற்கு நிறைய சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள் என்று இராஜாராம் தெரிவித்தார்.