ஈரோட்டில் தொடரும் அரசு பேருந்து ஜப்தி!

Webdunia

ஞாயிறு, 16 செப்டம்பர் 2007 (13:36 IST)
ஈரோடு பகுதியில் கடந்த சில நாட்களாக உரிய நட்டஈடு செலுத்தாத அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்படும் சம்வங்கள் தொடர்ந்த நடந்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த மாதம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் விபத்து ஏற்பட்டு நட்டஈடு கொடுக்காத அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. இதையடுத்து ஈரோட்டில் இதே சம்பவத்திற்கு கர்நாடகா அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. நேற்று கோபிசெட்டிபாளையத்தில் மீண்டும் இரு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டது.

கோபிசெட்டிபாளையம் மேட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (50). பாரியூர் ரோட்டில் 2001ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி அன்று வேலைக்கு சென்றார். அரசு பேருந்து மோதியதில் படுகாயம் அடைந்தார். ரூ.3 லட்சம் நட்டஈடு கேட்டு கோபி முதன்மை சார்ப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் நட்டஈடாக ரூ.78,000 வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ரூ.40,600 வழங்க உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் உரிய நேரத்தில் நட்டஈடு வழங்காததால், ராமசாமி தீர்ப்பு நிறைவேற்று மனுவை கோபி முதன்மை சார்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசு பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. நீதிமன்ற ஊழியர்கள் கோபி பேருந்து நிலையத்தில் இருந்த அரசு பேருந்தை ஜப்தி செய்தனர்.

இதேபோல் கோபி அளுக்குளி பள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிசாமி (34) என்பவர் மாட்டு வண்டியில் மூலவாய்க்கால் அண்ணா நகர் பகுதியில் செல்லும் போது அரசு பேருந்து மோதி காயம் அடைந்தார். ரூ.2 லட்சம் நட்டஈடு கேட்டு பழனிசாமி கோபி முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூபாய் 90 ஆயிரத்து 120 வழங்க உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அரசு பஸ் போக்குவரத்து கழகம் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த அப்பீல் வழக்கில் காயம் அடைந்த பழனிசாமிக்கு ரூ.40,200 வழங்க உத்தரவிட்டது. குறிப்பிட்ட காலத்தில் நட்டஈட்டுததொகையை போக்குவரத்து கழகம் வழங்கததால் கோபி முதலாவது சார்ப்பு நீதிமன்றம் அரசு பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. நீதிமன்ற ஊழியர்கள் கோபி பேருந்து நிலையத்திற்கு வந்து அரசு பேருந்தை ஜப்தி செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்