தி.மு.க. - பா.ம.க. உறவு நன்றாக உள்ளது : கருணாநிதி!

Webdunia

ஞாயிறு, 16 செப்டம்பர் 2007 (13:21 IST)
தி.மு.க. - பா.ம.க. உறவு நன்றாக உள்ளது. எங்களுக்குள் மோதல்கள் இருந்தாலும் இடையில் யாரும் வரமுடியாது எங்களை காப்பாற்றிக் கொள்ள கற்று கொண்டு விட்டோம் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்!

சேலத்தில் அரசு திட்டப்பணி துவக்க விழா நடைபெற்றது. விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி நலதிட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

தி.மு.க., சார்பில் எனது பெயரில் பெரியார் பல்கலையில், முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதி ஆய்வு மையம் அமைக்க ரூபாய் ஒரு கோடி நிதி அளித்துள்ளனர். இந்த ஆய்வு மையம் மூலம் வருங்கால செல்வங்கள் பயன் அடையும் என்று பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் ஏழு சதவீதம் இட ஒதுக்கீடு அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளேன். "மைனாரிட்டி" சமுதாயத்தினர் வளம் பெற வேண்டும் என கருத்து கொண்டுள்ள வேளையில், அதற்கு பொருத்தமாக "மைனாரிட்டி" அரசு என பெயர் வைத்துள்ளனர். "மைனாரிட்டி" அரசு என பெயரிட்டவர்களின் திக்கை நோக்கி நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர்கள் இப்போது எங்கு இருக்கின்றனர் என தெரியவில்லை.

மத்திய நிதி, மாநில நிதி இணைந்து சேலத்தில் "சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் அண்புமணி கலந்து கொள்வார் என நான் எதிர்பார்த்தேன். ஆனால், அவர் உடல் நலக்குறைவு காரணமாக இந்த விழாவில் பங்கு பெற முடியாது என பவ்யமாக கடிதம் அனுப்பி இருந்தார். சிலர் எதிர்பார்த்தது நடக்கவில்லை. நான் எதிர்பார்த்தது நடந்தது. எங்களுக்குள் ஆயிரம் மோதல்கள் இருக்கலாம். அதன் இடையில் எதுவும் வர முடியாது. எதுவும் என்றால் வஞ்சகம், சூது, பொறாமை, சூழ்ச்சி ஆகியவற்றுக்கு இடம் தர மாட்டோம்.

நாங்கள் நாங்களாகவே இருப்போம். எங்களை காப்பாற்றி கொள்ள கற்று கொண்டு விட்டோம். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவோம் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவர்கள் இன்று அதை எதிர்க்கிறார்கள். இந்த திட்டத்தை முதலில் சொன்னவர்கள் நாங்கள் தான், பார்லிமென்ட்டில் 45 மணி நேரம் பேசினோம் என்று புயலாய் பேசியவர்கள் எங்கே போனார்கள். 17 லட்சம் ஆண்டுக்கு முன் ராமாயணம் நடந்தது என கூறுவதும், ராமர் அவதாரம் இல்லை என சுப்ரீம் கோர்ட்டில் எழுதி கொடுத்தவர்கள், திரும்ப பெற்று விட்டனர். கேவலம் ஆட்சிக்காக. "ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் ஏற்பட்ட மோதலை கொண்டு கற்பனையாக ராமாயணம் இயற்றப்பட்டது" என்ற ஜவஹர்லால் நேருவின் கருத்தை ூக்கி எறிந்துவிட்டனர்.

ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என பேசியவர்கள், நேற்று என்னை சந்தித்து ராமர் பாலத்தில் அணு குண்டு செய்ய கூடிய ரசாயனம் இருப்பதாகவும், கந்தகம் இருப்பதாகவும், இந்தியாவை ஆயிரம் ஆண்டுகள் காப்பாற்றும் எனவும் ராமர் பாலத்தை இடிக்க வேண்டாம் என கோரிக்கை வைத்தார். இந்த கருத்தை கூட்டம் போட்டு பேசினால், ராமர் பாலம் இடிப்பதை விட்டு விடுகிறோம் என்றேன். "நாங்கள் கட்சி நடத்த வேண்டாமா?' என்றார். அவர்கள் கட்சி நடத்த வேண்டுமாம், தி.மு.க., பா.ம.க., கம்யூ., இளிச்சவாய கட்சிகளாம். இவர்கள் போரை ஆரம்பித்து விட்டு முடிக்க தெரியாமல் பேசுகின்றனர்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்