உண்ணாவிரதத்தை கைவிட்டார் நெடுமாறன்!

சனி, 15 செப்டம்பர் 2007 (17:41 IST)
ஈழத் தமிழர்களுக்காக சேகரிக்கப்பட்ட உணவு மற்றும் மருந்துப்பொருட்களை செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் அனுப்பிவைக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரி கடந்த 4 நாட்களாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவந்த பழ.நெடுமாறன், தமிழக முதலமைச்சரும், பா.ம.க. நிறுவனர் ராமதாஸூம் அளித்த உறுதிமொழியை ஏற்று உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்!

யாழ்ப்பாணம் தமிழர்களுக்காக சேகரிக்கப்பட்ட உணவு, மருந்து பொருட்களை படகுகள் மூலம் கொண்டு செல்ல தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, நாகையில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கிய பழ. நெடுமாறன், கடந்த 3 நாட்களாக சென்னையில் உண்ணாவிரத்தை தொடர்ந்தார்.

போராட்டத்தை கைவிடுமாறு தமிழக முதல்வர் விடுத்த கோரிக்கையை நெடுமாறன் ஏற்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை நெடுமாறனின் உடல் நிலையை சோதித்த பா.ம.கா. நிறுவனர், நாடித் துடிப்பு மேலும் குறைந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறி, உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார்.

தமிழக முதல்வரிடம் தான் பேசியதாகவும், உணவுப் பொருட்களை ஈழத்திற்கு அனுப்பிவைப்பதில் தான் உறுதியுடன் இருப்பதாக முதல்வர் தன்னிடம் தெரிவித்தாககவும் நெடுமாறனிடம் கூறினார். வைகோ உள்ளிட்ட தலைவர்களும் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு நெடுமாறனிடம் வலியுறுத்தினர்.

அவர்களின் வற்புத்தலையேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ள ஒப்புக்கொண்ட நெடுமாறன், ராமதாஸ் அளித்த பழரசத்தை அருந்தினார். நெடுமாறன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதை செய்தியாளர்களிடம் ராமதாஸ் அறிவித்தார்.

தமிழக முதல்வரும், ராமதாஸூம் அளித்த உறுதி மொழியை ஏற்று தனது போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்த நெடுமாறன், ஈழத் தமிழர்களுக்கு உணவு, மருந்து பொருட்களை அனுப்ப இதற்குப் பிறகாவது மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று தான் எதிர்பார்பதாக நெடுமாறன் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்