கேபிள் டிவி தொழிலாளர் தனி நலவாரியம்: கருணாநிதி அறிவிப்பு!
Webdunia
வியாழன், 13 செப்டம்பர் 2007 (11:19 IST)
அரசு சார்பில் அமைப்பு சாராத தொழிலாளர்களுக்கு பல குழுக்கள், நல வாரியங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த வாரியங்களைப் போல எங்களுக்கும் ஒரு வாரியம் வேண்டும் என்று கேபிள் டி.வி. உரிமையாளர்கள் கேட்டுள்ளார்கள். நிச்சயமாக அந்த வாரியம் அமைக்கப்படும். ஒரு சட்டம் கொண்டு வந்த பிறகு இந்த வாரியத்தை அமைக்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம், தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில் முதலமைச்சர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பதற்காக சென்னையில் நேற்று மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
நாடக நடிகர்களின் அற்புதமான நடிப்பைப் பார்த்து மெய்மறந்து போகிறோம். அற்புதமான கச்சேரிகளை கேட்டு இதயத்தைப் பறிகொடுக்கிறோம். அப்படி பறி கொடுப்பதால் உடல் வலு அதிகரிக்கும் என்பது மருத்துவ ஆராய்ச்சியின் முடிவு. இதைப் போலத்தான் பொழுதுபோக்காக கருதப்படும் தொலைக்காட்சிகளில் அதுபோன்ற அறிவுரைகள், ஆரோக்கிய வாசகங்கள், நல்லுரைகள், அதற்கான போதனைகள் எல்லாம் கேட்டு நம்மை சீர்படுத்திக் கொள்ள முடிகிறது. உலக செய்திகளை இன்றைக்கு சுலபமாக, மலிவாக தருவதோடு அல்லாமல் வீட்டுக்கே வந்து என்னைப் பார் என்று டி.வி. சொல்கிறது. அது நாட்டை, உலகத்தை காட்டுகிறது. நாட்டில் உள்ள மனிதனின் சுபாவங்களை எடுத்துரைக்கிறது. இப்படிப்பட்ட தேவைகளையும் மக்களுக்கு நிறைவேற்றி தர வேண்டும் என்பதற்காக மக்களுக்கு இலவச டி.வி. வழங்கி வருகிறோம்.
தொலைக்காட்சி பெட்டிகளை இலவசமாக அளிக்கப் போகிறோம் என்றதும் அதுமட்டும் போதுமா கேபிள் டி.வி. கொடுப்பாயா என்று கேட்டார்கள். அதில் உள்ள பிரச்சனைகளை அப்போதே எடுத்து சொன்னோம். விளங்கியவர்களுக்கு அது விளங்கியது. விளங்கிக் கொள்ள முடியாதவர்களுக்கு அது விளங்கவில்லை. அப்போது, கேபிள் டி.வி. கொடுப்பாயா என்று கேட்டார்கள். அதைக் கொடுத்தால், எதற்காக கேபிள் டி.பி. உனது சுயநலத்திறக்காக, உனது குடும்ப டி.வியை வளர்ப்பதற்காக என்று கூறுகிறார்கள். எனது குடும்ப டி.வி. எங்கு இருக்கிறது? என்னுடைய குடும்ப டி.வி. நீங்கள்தான். இப்போது கேபிள் டி.வியை அரசுடைமை ஆக்குகிறோம் என்றால் அதற்கு அர்த்தம் வேறு. ஏற்கனவே கேபிள் டி.வி. அரசுடைமை ஆக்கப்படும் என்று ஒரு செய்தி வந்தபோது, அது நிறைவேறவில்லை. காரணம், அது மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. மாநில அரசால் அதை செய்ய முடியாது. இப்போது நாங்கள் தொடங்கி இருப்பது, கேபிள் டி.வியை அரசு நடத்துவதற்கும் வேறுபாடு இருக்கிறது. இதை பலமுறை விளக்கி இருக்கிறோம்.
யார் வேண்டுமானாலும் கேபிள் டி.வி. நடத்தலாம். அதை இந்த அரசு கைப்பற்றாது. அண்ணா மறைவுக்கு பிறகு நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் தமிழ்நாட்டில் உள் பேருந்துகளை எல்லாம் தேசியமயமாக்கி அறிவித்தேன். இப்போதும் தேசியமய கொள்கை இருக்கிறது. ஆனால், அப்போது 30 ஆயிரம் பேருந்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டன. இன்றும் பல தனியார் நிறுவனங்கள் பேருந்துகளை இயக்குகின்றன. அதுபோல அரசு நடத்துகின்ற தொலைக்காட்சி கார்ப்பரேசனில் கேபிள் டி.வி. தொலைக்காட்சி நிறுவனங்கள் இருக்கலாம். அதே நேரத்தில் மற்றவர்களுக்கும் அந்த உரிமை உண்டு. மற்றவர்களும் அதை நடத்தலாம். இதுதான் அரசின் கொள்கை.
இதனை நாங்களே நடத்த வேண்டும் என்று சில தலைவர்கள் சொன்னபோது, 2 லட்சம் குடும்பங்களை நடுத்தெருவில் விட நான் தயாராக இல்லை என்று சொன்னேன். அவர்கள் தெருவில் நிற்பது மட்டுமல்ல கால ஓட்டத்தில் திருவோடு ஏந்த வேண்டிய நிலையும் வரும். அரசுடைமை என்பது கேட்பதற்கு பெருமையாக புரட்சியாக இருக்கலாம். அதனால், அரசு மட்டுமல்லாமல் அரசு நடத்துகின்ற நாடும் குட்டிச்சுவராகிவிடும். இப்படிச் சொல்வதால் நான் அரசுடைமை, பொதுவுடைமை, தேசிய உடைமை கொள்கைகளுக்கு எதிரி அல்ல. எதை எதை அரசுடைமை ஆக்க வேண்டும், எதை அரசு கவனத்திலே வைத்து நடத்த வேண்டும், எதை அரசு நிர்வாகப் பொறுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு சில பாகுபாடுகள் உள்ளன.
இங்கு பேசியவர்கள் எங்களை காப்பாற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டனர். இது எப்படி இருக்கிறது என்று கேட்டால் பிறந்த குழந்தை தாயைப் பார்த்து, தாயே என்னை காப்பாற்று என்பதைப் போல இருக்கிறது. இதை விட வேறு என்ன வேலை? அரசு நடத்துவதால் அரசுக்கு சில நோக்கங்கள் உள்ளன. இந்த திட்டத்தின் மூலம் வருவாயை பெருக்கலாம் என்று யோசனை சொன்னார்கள். அதை நான் விளங்கிக் கொண்டிருக்கிறேன். சில கோரிக்கைகளை தொகுத்து என்னிடத்திலே வழங்கியிருக்கிறார்கள். அதில் முக்கியமான கோரிக்கை ஒரு குழு அமைக்க வேண்டும் என்பது ஆகும். ஏற்கஎனவே இந்த அரசு சார்பில் அமைப்பு சாராத தொழிலாளர்களுக்கு பல குழுக்கள், நல வாரியங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த வாரியங்களைப் போல எங்களுக்கும் ஒரு வாரியம் வேண்டும் என்று கேட்டுள்ளார்கள். நிச்சயமாக அந்த வாரியம் அமைக்கப்படும். ஒரு சட்டம் கொண்டு வந்த பிறகு இந்த வாரியத்தை அமைக்கிறேன். ஏன் உடனே அமைக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேட்கக்கூடும்.
எதிர்க்கட்சிகள் சொல்லும் எந்தக் கருத்தையும் நான் உதாசீனப்படுத்துபவன் அல்ல. ஆனால், சொல்லுகிற முறையில் சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியும். நல்ல கருத்துக்களை ஏற்றுக் கொள்ளத்தக்க வகையிலே பாராட்டும் படி மென்மையாக சொல்ல வேண்டும் என்பதே அண்ணாவின் சொல்லுக்குப் பொருள். அப்படி சொல்லப்படும் கருத்துகளை ஏற்றுக் கொள்கிறவன்தான் நான்.