சென்னையில் மழைநீர் சேகரிப்பு திட்டம்: பிரதமர் பாராட்டு!
Webdunia
புதன், 12 செப்டம்பர் 2007 (12:25 IST)
நிலத்தடிநீர் வளம் தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கை தொடங்கி வைத்து பிரதமர் மன்மோகன்சிங் பேசுகையில், நிலத்தடி நீர் வளத்தை பெருக்குவதற்காக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று பாராட்டு தெரிவித்தார்.
அனைத்து கிராமங்கள், குடியிருப்புகள், நகரங்கள், புறநகர்ப்பகுதிகளிலும் நிலத்தடி நீரை சேமிப்பதற்காக அந்தந்த பகுதிகளை சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மக்கள் அமைப்புகள் நிலத்தடி நீர்வளத்தை பெருக்குவதற்காக திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டும். நீர்வள நிர்வாகம் மற்றும் குடிநீர் பராமரிப்பு போன்ற திட்டங்களை டெல்லியில் இருந்து அமல்படுத்த முடியாது. சமுதாய- பிராந்திய அளவில் மக்களே முன்னின்று இந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதன் மூலம், அதிக அளவில் பம்பு செட்டுகளை அமைத்து அதிகமான அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. விவசாயத்துக்கான மின்சாரத்துக்கு நியாயமான அளவுக்கு கட்டணம் விதிக்கப்பட்டு இருந்தால் நிலத்தடி நீர் சேமிப்புக்கு சற்று ஊக்கம் அளித்ததாக இருந்து இருக்கும். பொருளாதார, வர்த்தக ரீதியான தண்ணீர் பயன்பாட்டுக்கு தொடர்ந்து மானியம் வழங்க முடியாது என மன்மோகன்சிங் தெரிவித்தார்.
தண்ணீர் சேமிப்பு, குறிப்பாக நிலத்தடி நீர் சேமிப்புக்காக பல்வேறு கொள்கைகள் உள்ளன. நிலைமைக்கு ஏற்ப ஊக்கத்தொகை மற்றும் தண்டனை வழங்குவதன் மூலம் தண்ணீர் சேமிப்பு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும். ஆனால், மனித சமுதாயம் தண்ணீர் பாதுகாப்புக்காக போதிய நடவடிக்கையை எடுக்க வில்லை. மாறாக, உலக அளவில் வெப்ப அதிகரிப்புக்கும், சீதோஷ்ண நிலை மாற்றத்துக்கும் வழிவகுத்து வருகிறது. எனவே இந்த அச்சுறுத்தலில் இருந்து விடுபட தேசிய மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்தார்.