2007-08 நிதியாண்டில் விவசாயிகளுக்கு கடன்கள் அளிக்க ரூ.1,360 கோடி ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்!
தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் பிரச்சனைகளை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ள போராட்டம் குறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் கருணாநிதி, விவசாயிகளைப் பற்றி பேச ஜெயலலிதாவிற்கு எந்தத் தகுதியும் இல்லை என்று கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த தி.மு.க., 2006-07 நிதியாண்டில் மட்டும் 6,31,283 விவசாயிகளுக்கு வேளாண் கடன்களாக ரூ.1,251 கோடியை அளித்துள்ளது என்றும், வரும் நிதியாண்டில் இத்தொகை ரூ.1,360 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஜெயலலிதா போராட்டம் அறிவித்துள்ள தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் மட்டும் கடந்த நிதியாண்டில் ரூ.167 கோடி வேளாண் கடனாக அளிக்கப்பட்டுள்ளது என்றும், ஜெயலலிதா ஆட்சியில் இம்மூன்று மாவட்டங்களுக்கு 2005-06 நிதியாண்டில் ரூ.56 கோடி மட்டுமே வழங்கப்பட்டது என்றும் முதலமைச்சர் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.
விவசாயிகளுக்கு விதைகளோ, உரமோ வழங்கப்படவில்லை என்ற முன்னாள் முதலமைச்சரின் குற்றச்சாற்றை மறுத்துள்ள முதலமைச்சர் கருணாநிதி, விவசாயிகளுக்கு 15,116 மெட்ரிக் டன் விதை நெல் அளிக்கப்பட்டது என்றும், அரசிடம் விவசாயிகளுக்கு வழங்க இப்போதும் 33,607 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளதாகவும், சம்பா, தாளடி சாகுபடிக்காக 1.11 லட்சம் டன் உரம் வழங்கப்பட வகை செய்யப்பட்டதாகவும், 58,000 மெட்ரிக் டன் அளவிற்கு உர இருப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.