முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தமிழக, கேரள முதலமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் அடுத்த மாதம் நடைபெறுகிறது!
புதுடெல்லியில் இத்தகவலை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைஃபுதீன் சோஸ் தெரிவித்தார்.
அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேரள அரசு எதிர்த்து சட்ட முன்வரைவை கொண்டுவந்துள்ள நிலையில் இந்தப் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது.
கேரள அரசின் சட்ட முன்வரைவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில் இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, அக்டோபர் மாதம் தமிழக - கேரள முதல்வர்கள், பிரதமர் தலைமையில் கூடி இப்பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இது தொடர்பாக இரு மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சைஃபுதீன் சோஸ் தெரிவித்துள்ளார்.