தீர்ப்பு வழங்கும் முன் மக்கள் பிரச்னை மற்றும் அவர்களின் மனசை தெரிந்து கொண்டு தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம் வலியுருத்தினார்.
உச்சமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ள சதாசிவத்துக்கு ஈரோடு பார் அசோசியேஷன் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் பேசுகையில், நீதிபதி பதவியில் இருக்கும்போது சில எல்லைக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. நீதிமன்றம் தேடி வரும் பொது மக்களுக்கு அதிக செலவு வைக்க கூடாது என்ற நோக்கத்தில் பணிபுரிந்தேன். சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கும் முன் மக்கள் பிரச்னை, மன நிலை தெரிந்து கொண்டு தீர்ப்பு வழங்க வேண்டும்.
உச்சநீதிமன்ற நீதிபதியாக கடந்த 21 ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டேன். பதவி ஏற்றதும் நான் சந்தித்த முதல் கொலை வழக்கில், பஞ்சாப், அரியானா நீதிமன்றங்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி இருந்தன. ஒரு நபர் மட்டும், இலவச சட்ட உதவியுடன் மேல் முறையீடு செய்திருந்தார். இரண்டாவது நீதிபதி அகர்வால், ஒன்பதாவது நீதிபதி நவ்லோக்கர் ஆகியோர் மத்தியில் நான் அமர்ந்திருந்தேன். கொலை நடந்த இடம் ஒரு தோட்டத்தில், மறு நாள் காலையில் கால் பதிந்த இடத்தையும், கால் பதிந்த மண்ணையும் ஆதாரமாக கொண்டு தீர்ப்பு வழங்கி இருந்தனர். தோட்டம் என்னும் போது பல பேர் செல்லும் இடம். இதனால் இவர்கள் தான் கொலையாளி என்று கூறமுடியாது என்று கருத்து தெரிவித்தேன். இந்த கருத்தை மற்ற நீதிபதிகளும் ஏற்றுக்கொண்டு குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்தனர் என்று கூறினார்.