தமிழகத்தில் 400 ஜவ்வரிசி ஆலை மூட முடிவு

Webdunia

வியாழன், 30 ஆகஸ்ட் 2007 (12:12 IST)
ஜவ்வரிசி உற்பத்தியாளர்களின் சேகோ சர்வ் பிரச்னை தொடர்பாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமையில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டது.

இதனால் வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆலைகளை மூட ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். 400 ஆலைகள் மூடப்படுவதால், ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தியாளர்கள் முன்னேற்ற நலச்சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் நேற்று சேலத்தில் நடந்தது.

கூட்டத்திற்குப் பின்னர், சங்க மாநில தலைவர் துரைசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஆண்டு ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் 30 லட்சத்துக்கும் அதிமான ஜவ்வரிசி மூடைகளில், 18 லட்சம் மூடை சேகோசர்வ் மூலம் விற்பனை செய்யப்பட்டது. இத்தகைய விற்பனை முறை 2002ம் ஆண்டு வரை மட்டுமே நீடித்தது. உணவு கலப்பட தடுப்பு சட்டத்துக்கு புறம்பான பரிசோதனை முறை போன்று, அதிகாரிகளின் தன்னிச்சையான கெடுபிடிகளால் தற்போது, சேகோசர்வ் மூலம் வெறும் 8 லட்சம் மூடை மட்டுமே விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்களுக்கு நம்பகமான விற்பனை கேந்திர மையமாக விளங்கிய சேகோசர்வ் இப்போது, வெளி வியாபாரிகளை ஊக்குவிக்கிற மையாக மாறிவிட்டது. வேறுவழியின்றி 22 லட்சம் ஜவ்வரிசி மூட்டை வெளி சந்தைகளில் விற்கப்பட்டு வருகிறது.

வெளியில் விற்பதால் மூட்டை ஒன்றுக்கு 300 ரூபாய் குறைத்து விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. விலை குறைப்பால் ஆண்டுக்கு ரூ. 70 கோடிக்கு மேல் உற்பத்தியாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் இழப்பு ஏற்படுகிறது. அதே நேரத்தில், பணமும் உடனடியாக கைக்கு கிடைப்பதில்லை. விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்வதில் சிக்கல் ஏற்படுவதோடு, அவர்களுக்கு கட்டுபடியான விலையும் கொடுக்க முடிவதில்லை.

அதன் காரணமாகவே, கல்ராயன்மலை, கருமந்துறை மலைவாழ் விவசாயிகளுக்கு மூட்டை ஒன்றுக்கு ரூ. 175க்கு மேல் கொடுக்க முடியாமல் போகிறது. குறைந்தது ரூ. 250 கொடுத்தால் தான் ஓரளவாவது விவசாயிகள் பயன்பெற முடியும். சேகோசர்வின் தவறான போக்கால் இத்தகைய விலையை கொடுக்க முடியாததால், மரவள்ளி கிழங்கு உற்பத்தியே அழிந்து விடும் அபாயம் நிலவுகிறது. சேகோசர்வின் தேவையற்ற பரிசோதனை முறையை நீக்கவும், உணவு கலப்பட தடுப்பு சட்டத்தின்படி பரிசோதனை முறையை கையாள வேண்டி சென்ற 6ம் தேதி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமையில் முத்தரப்பு பேச்சு நடந்தது. அதில், விவசாயிகள், ஜவ்வரிசி உரிமையாளர்கள், சேகோசர்வ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இன்னும் 15 நாளில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

அதை நாங்கள் முழுமனதோடு ஏற்றுகொண்டோம். எதிர்பார்த்தப்படி எந்த நல்ல முடிவும் அறிவிக்கப்படவில்லை. அதிகாரிகளோடு ஒத்துபோக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது உற்பத்தியாளர்களுக்கு எதிரான முடிவு. அதனால், முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டது.

எனவே, கோரிக்கையை வலியுறுத்தி வரும் செப்டம்பம் மாதம் முதல் ஜவ்வரிசி ஆலைகளை மூட முடிவு செய்துவிட்டோம்.

தமிழக அளவில் 400 ஆலை மூடப்படும். சேகோ தொடர்பான எல்லா தொழிலும் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்படும். நேராகவும், மறைமுகமாகவும் இத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எங்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வரை அடுத்தடுத்து தொடர்ந்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இது குறித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்