பெருந்துறை சமையல் எரிவாயு உருளை நிரப்பும் ஆலையில் தொழிலாளிகள் துவங்கியுள்ள திடீர் வேலை நிறுத்தம் காரணமாக ஈரோடு, நாமக்கல் மற்றும் கோவை மாவட்டங்களில் எரிவாயு உருளை தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் சமையல் எரிவாயு உருளைகளை சிலிண்டர்களில் நிரப்பும் "பாட்லிங் பிளான்ட்' ஆலைகள் சென்னை தண்டையார் பேட்டை, அத்திப்பட்டு, சேலம், பெருந்துறை சிப்காட், கிணத்துக்கடவு, திருச்சி, மதுரை, மன்னார்குடி, மயிலாடுதுறை, செங்கல்பட்டு உட்பட 10 இடங்களில் உள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலுள்ள "பாட்லிங் பிளான்ட்'ல் தினமும் 30 ஆயிரம் உருளைகளில் எரிவாயு நிரப்பப்படுகிறது. அங்கிருந்து அவைகள் ஈரோடு, நாமக்கல் மற்றும் கோவை மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் கூலி உயர்வு, பணி நிரந்தரம் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாட்களாக உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக எண்ணெய் நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்களும் ஆதரவு தெரிவித்து நேற்று முன்தினம் (27ம் தேதி) முதல் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் உருளைகளில் எரிவாயு நிரப்பும் பணி முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு நாமக்கல் மற்றும் கோவை மாவட்டங்களில் சமையல் காஸ் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்று இண்டேன் காஸ் டீலர்கள் கூறுகின்றனர்.