தி.மு.க.வும், காங்கிரசும் ஒரே பாதையில் பயணிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கூறினார்!
ராஜீவ் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனிற்கு வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, அங்கு ராஜீவ் காந்தி படத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.
ராஜீவ் காந்தியோடு தனக்கு பழக்கமில்லை என்றாலும், தமிழக சட்டமன்றத்தில் 1989 ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்விற்குப் பிறகு தான் ராஜீவ் காந்தியை சந்தித்ததாகவும், அந்தச் சந்திப்பின் போது அவர் அளித்த ஆலோசனையின்படிதான் தமிழக சட்டப் பேரவையில் இருக்கைகள் தற்பொழுது மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கருணாநிதி பேசினார்.
பழைய மகாபலிபுரம் சாலைக்கு ராஜீவ் காந்தியின் பெயர் வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் எம். கிருஷ்ணசாமி முன்வைத்த கோரிக்கையின் படி, அந்தச் சாலைக்கு ராஜீவ் காந்தியின் பெயர் சூட்டப்படும் என்று கூறிய கருணாநிதி, நாம் எல்லோரும் ஒரே சாலையில் செல்வோம். அது ஜனநாயக சாலை, சர்வாதிகார சாலை அல்ல. சாலை மாறமாட்டோம் என்று கூறி முடித்தார்.