தூத்துக்குடி மாவட்டத்தில் டைட்டானியம் தொழிற்சாலை அமைப்பது குறித்து மக்களின் கருத்தை கேட்டறிய அமைச்சர்கள் குழுவை முதலமைச்சர் கருணாநிதி அமைத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது. தூத்துக்குடி மாவட்டத்தில் டைட்டானியம் டை ஆக்சைடு தொழிற்சாலை அமைப்பது குறித்து மக்களின் கருத்துக்களை கேட்டறிய குழு அமைக்கப்படும் என்று கருணாநிதி அறிவித்திருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்குழுவில் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், செய்தியாளர் ஆகியோர் பொதுமக்களின் முன்னிலையில் கருத்துக் கணிப்பு நடத்தி, அதன் பின்னர் குழுவினரிடமிருந்து அறிக்கையைப் பெற்று இத்திட்டம் குறித்து முடிவெடுப்பதாக முதல்மைச்சர் கருணாநிதி அறிவித்து இருந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்று மக்களிடம் கருத்து கணிப்பு நடத்து வதற்காக உயர்கல்வி மற்றும் கனிமத்துறை அமைச்சர் பொன்முடி, சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன், கால்நடைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோரையும், தொழில் துறை செயலாளர், வருவாய்த்துறை செயலாளர், கனிமத்துறை ஆணையர் ஆகிய உயர் அதிகாரிகளையும் கொண்ட ஆய்வுக்குழு ஒன்றினை அமைத்து முதலமைச்சர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்.
இந்த ஆய்வுக்குழு விரைவில் அந்தப்பகுதி கிராமங்களுக்கு சென்று பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்து அறிக்கை அளிக்கும் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.