கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கூட்டுச் சதி, மதக் கலவரத்தை தூண்டியது ஆகிய முக்கிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத 84 பேர் பிணைய விடுதலை கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 167 பேரில் 84 பேர் மீது சிறு குற்றங்கள் மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளன என கோவை தனி நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், கடந்த 9 ஆண்டுகளாக சிறையில் இவர்கள் சிறையில் இருந்து வருகின்றனர்.
இவர்கள் மீது உறுதி செய்யப்பட்ட குற்றங்களுக்கு அளிக்கப்படும் தண்டனைக் காலம், இவர்கள் சிறையில் இருந்த காலத்தை விட குறைவாகத்தான் இருக்கும் என்றும், எனவே இவர்கள் பிணைய விடுதலை பெற தகுதியானவர்கள் என்றும் நீதிமன்றம் கூறியது.
இதையடுத்து, 84 பேரும் பிணைய விடுதலை கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை தனி நீதிமன்ற நீதிபதி உத்ராபதி முன்னிலையில் வருகிற 6 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.